அடைமானக் கடன் பெறுவோர் தாமதமாக அதனைத் திரும்பச் செலுத்தும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து யுஓபி வங்கி ஒரு நிலையான சட்ட வழிமுறையை கடைப்பிடிக்கவில்லை என உயர்நீதிமன்றம் அந்த வங்கியைச் சாடியுள்ளது.
கடனைத் திரும்பப்பெற வங்கியால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் கூடுதல் கட்டணம் பற்றி, நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போதெல்லாம் வங்கி வழக்கை மீட்டுக்கொண்ட உதாரணங்களை உயர்நீதிமன்றம் முன் வைத்தது.
மே 18ஆம் தேதி வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ தீர்ப்பு ஒன்றில் தாமதமாகக் கடன் செலுத்துவோர்மீது விதிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை நியாயப்படுத்துமாறு நீதிமன்றம் கேட்டபோது, வங்கி வழக்கை மீட்டுக்கொண்டதை திருப்தியளிக்காத செயல் என்று துணைப் பதிவாளர் ரன்தீப் சிங் குறிப்பிட்டார்.
அக்ஸ்லி பிஸ்ஹப் என்ற உபி ரோடு 1ல் இயங்கிய நிறுவனத்தின்மீது யுஓபி வங்கி $556,200 தொகைக்கான அடைமானக் கடனைச் செலுத்தத் தவறிய வழக்கு ஒன்றைத் தொடுத்து, அந்தத் தீர்ப்பின் போது துணைப் பதிவாளர் அக்கருத்தை பதிவுசெய்தார்.
வேறு வழக்குகளிலும் அதே நிலைப்பாடு
அதோடு 2025ஆம் ஆண்டில் தொடுத்த வேறு இரு வழக்குகளிலும் இதேபோன்று கூடுதல் கட்டணத்தை நியாயப்படுத்தும்படி நீதிமன்றம் கோரியபோது வழக்கை வங்கி பின்வாங்கிக் கொண்டது.
கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து யுஓபி வங்கி அதன் கொள்கை நிலைப்பாட்டை சட்டப்படி வகுத்துக்கொள்ளவேண்டும். அதனை நியாயப்படுத்தி தற்காத்துக்கொள்ளும் தருவாயில் பின்வாங்குதல் முறையல்ல என்று துணைப் பதிவாளர் ரன்தீப் கருத்துரைத்தார்.

