அடுத்த இரு வாரங்களுக்கு அதிக வெப்பம்

வெப்ப அலை ஏற்பட வாய்ப்பில்லை: அரசாங்கம்

அடுத்த இரு வாரங்களுக்கு அதிக வெப்பம்

2 mins read
de3ed318-01a7-4ae6-bb8a-747786d9662e
மெர்லயன் பூங்காவில் மார்ச் 26ஆம் தேதி வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கச் சட்டையால் தலையையும் முகத்தையும் மூடிக்கொண்டிருக்கும் மாது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த இரு வாரங்களுக்கு சில நாள்களில் சிங்கப்பூரில் வெயில் கடுமையாக இருக்கும்.

சில பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், சிங்கப்பூரில் வெப்ப அலை ஏற்படுவதற்கான அபாயம் குறைவாகவே உள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தின் இறுதி வாரங்களைவிட ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் மழை அதிகமாக இருக்கும். பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேகமூட்டம் குறைவாக இருக்கும் நாள்களில் மட்டும் மதிய நேர வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்ட வாய்ப்புள்ளது.

வெப்பஅலை இல்லாத போதும் வெப்பத்தின் தாக்கம்

சிங்கப்பூரின் வானிலை நிலையங்களில் பதிவாகும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு 35 டிகிரி செல்சியஸாக இருந்தால் மட்டுமே அது வெப்ப அலை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

மார்ச் மாத இறுதியில் சில பகுதிகளில் வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தாலும், சராசரி அளவு குறைவாக இருந்ததால் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

எனினும், வெப்ப அலை இல்லாத காலங்களிலும் சிங்கப்பூரில், குறிப்பாக நண்பகல், பிற்பகல் வேளைகளில் வெப்பத்தின் தாக்கத்தை மக்கள் அதிகம் உணரக்கூடும்.

வெப்ப பாதிப்பைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெப்பப் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு துறைகளும் நினைவூட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சுகாதார நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்குநர்களும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு வெப்பம் தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குவாங்யாங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெயிலைத் தவிர்க்க மார்ச் 26ஆம் தேதி பிஷான் - அங் மோ கியோ பூங்காவில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ஓடுகின்றனர்.
குவாங்யாங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெயிலைத் தவிர்க்க மார்ச் 26ஆம் தேதி பிஷான் - அங் மோ கியோ பூங்காவில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ஓடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெயிலைச் சமாளிக்க நடவடிக்கைகள்

பள்ளிகள் மாணவர்களின் நலன் கருதிச் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பள்ளிச் சீருடைக்குப் பதிலாக உடற்பயிற்சி உடைகளை அணிவது, அடிக்கடி தண்ணீர் அருந்துவது, ஓய்வு எடுப்பது போன்ற சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படலாம்.

பள்ளிகள் கூடுதல் மின்விசிறிகளைப் பயன்படுத்துதல் அல்லது வகுப்புகளைக் குளிர்ந்த இடங்களுக்கு மாற்றுதல் போன்ற முடிவுகளை எடுக்க கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

குளிர்ச்சி மையங்கள்

ஒருவேளை வெப்ப அலை முன்னறிவிப்பு செய்யப்பட்டால், 2023இல் அமைக்கப்பட்ட ‘மெர்குரி’ பணிக்குழுவின் ஒருங்கிணைப்புடன், சமூக மன்றங்கள், குடியிருப்பாளர்க் குழு மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கான குளிர்ச்சி மையங்கள் திறப்பது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

வெயிலிலிருந்து பாதுகாக்க தொப்பியுடன் கூடுதலாக அட்டைப் பெட்டிகளையும் இணைத்துச் செய்த கவசங்கள், தலையை முழுதாக மூடும் பாதுகாப்பு உடைகளுடன் வெளிப்புறப் பணியாளர்கள்.
வெயிலிலிருந்து பாதுகாக்க தொப்பியுடன் கூடுதலாக அட்டைப் பெட்டிகளையும் இணைத்துச் செய்த கவசங்கள், தலையை முழுதாக மூடும் பாதுகாப்பு உடைகளுடன் வெளிப்புறப் பணியாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புறப் பணியாளர்கள், ராணுவத்தினருக்கு வசதிகள்

கட்டாய வெப்ப காயத் தடுப்புப் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ள தற்காப்பு அமைச்சு, வெயில் காலத்தில் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் ஓய்வு நேரம், நீர்ச்சத்து பராமரிப்பு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வெளிப்புறங்களில் பணிபுரியும் ஊழிர்களுக்குப் போதுமான நீர்ச்சத்து, ஓய்வெடுக்க நிழலான இட வசதிகளை உறுதி செய்யுமாறு மனிதவள அமைச்சு முதலாளிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

பொதுமக்கள் தங்களின் வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு முன்பு, ‘myENV’ செயலி அல்லது வானிலை இணையத்தளம் வாயிலாக வெப்ப நிலையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்