அதிக வட்டி தரும் வங்கிக் கணக்குகள் மீது இளம் சிங்கப்பூரர்கள் நாட்டம்

2 mins read
c524e4af-8ee4-4913-9a20-de77244f288c
18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 1,000 இளம் சிங்கப்பூரர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆபத்து குறைவாக உள்ள சேமிப்புகளையே வேலை செய்யும் இளம் சிங்கப்பூரர்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.

மின்னிலக்க நாணயம் போன்ற அதிக ஆபத்து நிறைந்த முதலீடுகளில் அவர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் ஆய்வு தெரிவித்துள்ளது.

நவீன யுகத்தில் வாழ்ந்தாலும் சேமிப்பு என்று வரும்போது இளைய ஊழியர்கள் பழைய பாணியைப் பின்பற்றுகிறார்கள். கூடுதல் வட்டி தரக்கூடிய வங்கிக் கணக்குகளில் அவர்கள் தங்களது பணத்தைப் போட்டு வைப்பதாக ஆய்வு கண்டறிந்தது.

18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 1,000 இளம் சிங்கப்பூரர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களில் முழுநேர ஊழியர்களாக உள்ள 73 விழுக்காட்டினர் சேமிப்பு வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர்.

இதேபோன்றதொரு நிலவரத்தைத்தான் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பிற ஆய்வுகளும் தெரிவித்து இருந்தன.

இளம் சிங்கப்பூரர்கள் தங்களது சம்பளத்தை வரவு வைத்த பின்னர் அதிலிருந்து மாதா மாதம் கூடுதலாக $ 100 முதல் $400 வரை பணம் எடுக்கக்கூடிய வங்கிக் கணக்குகளை விரும்புவதாக அந்த ஆய்வுகள் குறிப்பிட்டு இருந்தன.

அதுபோன்ற வங்கிக் கணக்குகளில் போடப்படும் முதல் 100,000 வெள்ளிக்கு மட்டுமே போனஸ் வட்டி வழங்கப்படுகிறது. அதுவே அவர்களைக் கவரும் அம்சமாக உள்ளது என்கிறது ஆய்வு.

சந்தை ஆய்வு நிறுவனமான கன்டார் (Kantar), களத்தில் இறங்கி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சார்பாக ஆய்வு நடத்தியது.

இளம் முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட அதிக ஆபத்தைச் சந்திக்கக்கூடியவர்கள் என்னும் பொதுவான கருத்துக்கு மாறாக ஆய்வின் முடிவுகள் அமைந்துள்ளன.

மின்னிலக்க நாணயம் போன்ற மாற்று முதலீட்டு வாய்ப்புகள் அவர்களின் தெரிவாக இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்தது.

தங்கம், பணப் பத்திரங்கள், சொத்துச் சந்தை போன்ற நிலையான, நிம்மதியான அம்சங்களில் தங்களது பணத்தை இளையர்கள் போட்டு வைக்க விரும்புவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்