தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழ்த்தளமா குப்பைக்கூளமா: ஓராண்டாகத் தொடரும் தொல்லை

2 mins read
27292fc1-5dfb-4f86-abcd-a85d1a6df4bc
ஒவ்வொரு முறையும் சிவப்பு நிற நெகிழிப் பைகளில் குப்பைகள் கீழே வீசப்படுவதாகக் குடியிருப்பாளர் கூறினார். - படம்: ஸ்டோம்ப்

உயர்மாடியிலிருந்து குப்பைகளைக் கீழே வீசும் சம்பவங்கள் உட்லண்ட்ஸ் கிரசண்ட் புளோக் 775ல் கடந்த ஓராண்டாக நடந்து வருவதாகக் குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக நிலைமை மோசமடைந்துவிட்டதாக ஸ்டோம்ப் தளத்தில் தெரிவித்தார் அவர்.

தினமும் கீழே தூக்கி எறியப்படும் குப்பைகள், வேண்டாத விருந்தாளிகளை ஈர்க்கின்றன.

குப்பைகளை உணவென்று நினைத்துக் கிளறும் புறாக்களைக் காட்டும் படங்களையும் காணொளி ஒன்றையும் அந்தக் குடியிருப்பாளர் பகிர்ந்துகொண்டு, தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டார்.

தான் பலமுறை புகார் அளித்ததுடன் தவறு இழைப்பவரின் செயல்களைக் காட்டும் ஆதாரத்தையும் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றார்.

ஒவ்வொரு முறையும் சிவப்பு நிற நெகிழிப் பையில் குப்பைகள் கட்டி வீசப்படுவதைத் தான் கவனித்து வந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஸ்டோம்ப் தளத்திற்கு செம்பவாங் நகர மன்றம் மே 29ஆம் தேதி பதிலளித்தது.

குப்பை வீசுவதாகத் தாங்கள் சந்தேகிக்கும் வீடுகளுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிப்புகளை விநியோகித்ததுடன் ஒவ்வொரு மாடியிலும் மின்தூக்கி அருகே அதேபோன்ற அறிவிப்புகளையும் ஒட்டியதாக அது தெரிவித்தது.

முதல் மாடியில் விழிப்புணர்வு பதாகைகளும் உள்ளதாகக் கூறப்பட்டது.

தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து செயல்படுவதாக நகர மன்றம் கூறியதுடன் வாரியம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளதாகவும் தெரிவித்தது.

இருப்பினும், மே 30ஆம் தேதி காலை அதே புளோக்கிலிருந்து கத்தை கத்தையாகச் சஞ்சிகைகள் கீழே தூக்கி எறியப்பட்டதாகக் குடியிருப்பாளர் தெரிவித்தார். நிலைமை மேம்பட்டதாகத் தெரியவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்