சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் ஆகஸ்ட் 21ஆம் தேதிமுதல் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் தற்காலிகமாகக் குறைக்கப்படுகிறது.
அதிக வெப்பநிலை, புகைமூட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதல் சமயச் சொற்பொழிவுக்கு வழக்கமாக இடம்பெறும் ஆறிலிருந்து ஏழுப் பக்கங்கள், இனி ஏறக்குறைய நான்கு பக்கங்களாகக் குறைக்கப்படும் என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் வெள்ளிக்கிழமை சமூக ஊடகத்தின்வழி தெரிவித்தது.
“மோசமான வானிலையில் மக்கள் ஒன்றுகூடி, வழிபட்டு, தொடர்ந்து செளகரியத்துடன் இருக்க இந்நடவடிக்கை கைகொடுக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று முயிஸ் குறிப்பிட்டது. பின்னர் தெரிவிக்கும் வரை இந்த மாற்றம் நடப்பில் இருக்கும் என்றும் அது சொன்னது.
முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை சமயச் சொற்பொழிவுகளை முஃப்தியின் வழிகாட்டுதலில் முயிசின் முஃப்தி அலுவலகம் எழுதுகிறது.
முஃப்தி, சிங்கப்பூரின் ஆக உயரிய இஸ்லாமிய அதிகாரியாவார். இங்குள்ள முஸ்லிம்களுக்கான சமயம் தொடர்பான முக்கிய விவகாரங்களை அவர் மேற்பார்வையிடுகிறார்.
ஆகஸ்ட் மாதத்தின் பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியாக 33லிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று இம்மாதம் 17ஆம் தேதி கணிக்கப்பட்டது. சில நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும்.


