விளையாட்டை வளமான, கவரக்கூடிய வாழ்க்கைத் தொழிலுக்கான வழி என்பதை சிங்கப்பூரர்களிடம் ஏற்படுத்த, அரசாங்கம் தேசிய திடல்தட வீரர்களுக்கான ஆதரவை பல்வேறு வகைகளில் மேம்படுத்த உள்ளது.
செப்டம்பர் 1 முதல் அவர்கள், இரு உபகாரச் சம்பள வழிமுறைகள் வாயிலாக, விளையாட்டு உன்னதக் கல்வி (spexEducation ) பட்டதாரி உபகாரச் சம்பளத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும், போட்டிகளில் பங்கேற்கும் அதேநேரம் கல்வியையும் தொடர உதவக்கூடியது ‘டூயல் கரியர்’ என்பது ஒரு வழிமுறை.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் படிக்க விரும்புவோருக்கு உதவக்கூடியது ‘நியூ கரியர்’ உபகாரச் சம்பள வழிமுறை.
இந்தத் திட்டத்தின் விவரங்கள் தற்போது பிரதமராக உள்ள லாரன்ஸ் வோங்கால் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
அது பற்றிய அறிவிப்பை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிட்டார்.
தேசிய தினப் பேரணிக்குப் பின்னர் நடைபெற்ற மக்கள் ஈடுபாட்டுக் கூட்டம் ஒன்றில் அவர் அதனை அறிவித்தார். சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு உன்னத உபகாரச் சம்பளத்தின் உதவித்தொகை 2025 ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கப்படும். மேலும், உபகாரச் சம்பளம் பெறுவோரின் மத்திய சேம நிதிக் கணக்குகளில் மாதந்தோறும் தொகை நிரப்பும் முறை அப்போது அறிமுகம் காணும்.
தொடர்புடைய செய்திகள்
சலுகையை அதிகரிப்பதன் மூலம் திடல்தட வீரர்கள், உடல்குறை உள்ள திடல்தட வீரர்களின் நிதி நிலைத்தன்மையை பலப்படுத்த முடியும் என்றார் திரு டோங்.
உதாரணத்திற்கு, $4,000 விளையாட்டு உன்னத உபகாரச் சம்பளம் பெறுவோருக்கு 2025 ஏப்ரல் 1 முதல் அந்தத் தொகை $5,000 வரை அதிகரிக்கும். அதில் 20 விழுக்காடு ($1,000) மத்திய சேம நிதியில் போடப்படும். அத்துடன், ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பு மத்திய சேம நிதிக் கணக்கில் 17 விழுக்காடு ($850) செலுத்தும்.
அதாவது, $4,000 உதவித்தொகை பெறும் அதேவேளை அவர்களின் மத்திய சேம நிதிக் கணக்கில் ஒவ்வொரு மாதம் $1,800க்கு மேல் சேரும்.