தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெடிஷீல்டு லைஃப் காப்புறுதியில் 2025 ஏப்ரல் முதல் அதிக பலன்கள்

2 mins read
729ff4fb-4651-4e83-8167-f6f81a50a207
11 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தை மறுஆய்வு செய்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ‘மெடிஷீல்டு லைஃப்’ காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2025 ஏப்ரல் முதல் படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாற்றங்கள் அறிமுகமான பின்னர், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் சிங்கப்பூரர்கள் அதிகமான காப்புறுதிக் கோரல்களைப் பெறமுடியும்.

அத்துடன், இன்னும் அதிகமான வெளிநோயாளி சிகிச்சைகளுக்கும் காப்புறுதித் திட்ட பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும்.

உதாரணத்திற்கு, சாதாரண வார்டில் தங்கி இருக்கும்போது முதல் இரண்டு நாள்களுக்கு $1,000 மட்டுமே அதிகபட்சமாக காப்புறுதித் திட்டத்திலிருந்து பயன்படுத்த முடியும் என்பது தற்போதைய நிலை.

அந்தத் தொகை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு $1,630க்கு அதிகரிக்கும். அதேநேரம், தீவிர சிகிச்சை நோயாளிகளுக்குப் பலன் தரக்கூடிய காப்புறுதித் தொகை $5,140 என இரட்டிப்பாகும்.

மற்றொரு சலுகையாக, காப்புறுதி ஆண்டில் கோரப்படும் தொகையின் அளவு $150,000லிருந்து $200,000க்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த விவரங்களை சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

மெடிஷீல்டு லைஃப் திட்டம் ஆற்றலுடன் விளங்குவதை உறுதிசெய்வதற்காக அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழு பரிந்துரைத்த யோசனைகளை ஏற்ற பின்னர் அமைச்சு இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே சிறந்த முறையில் இயங்கக்கூடிய மெடிஷீல்டு லைஃப் மற்றும் மெடிசேவ் திட்டங்களை, புதிய மாற்றங்கள் மேலும் வலுப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

புதிய மாற்றங்கள் காரணமாக காப்புறுதிக்குச் செலுத்தும் சந்தாத் தொகையும் அதிகரிக்கும். குறிப்பாக, மூத்த சிங்கப்பூரர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

இருப்பினும், 10ல் ஒன்பது பேர் இந்த சந்தாத் தொகை அதிகரிப்பை ஈடுசெய்யும் அளவுக்கான உதவிகளைப் பெறுவர்.

சிங்கப்பூரில் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதியில் இணைவது கட்டாயம் ஆகும்.

நான்காண்டுகளில் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் முதல்முறை மறுஆய்வு செய்யப்பட்டது.

சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதால் சந்தாத் தொகையை அதிகரிக்குமாறு மறுஆய்வுக் குழு பரிந்துரை செய்தது.

அதேநேரம், வெளிநோயாளிகளுக்கான காப்புறுதிப் பலன்களை மேம்படுத்தவும் அது யோசனை தெரிவித்தது.

11 உறுப்பினர்களை உள்ளடக்கிய மெடிஷீல்டு லைஃப் மன்றம் அந்த மறுஆய்வை மேற்கொண்டது.

காப்புறுதிச் சந்தாத் தொகையை அடுத்த மூன்றாண்டுகளில் கட்டம் கட்டமாக அதிகரிக்கலாம் என்பதும் அதிகபட்சமாக 35 விழுக்காடு வரை அந்த அதிகரிப்பு இருக்கலாம் என்பதும் மன்றத்தின் பரிந்துரைகள்.

குறிப்புச் சொற்கள்