சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளும் விமானங்களை இயக்கும் நிறுவனங்களும் ஜூலை 1 முதல் கூடுதல் கட்டணமும் தீர்வையும் செலுத்த வேண்டும்.
செயல்பாட்டு, கட்டுப்பாட்டுக் கூறுகள் தொடர்பான செலவுகளை ஈடுகட்ட, இந்த நடைமுறை நடப்புக்கு வருவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் தெரிவித்துள்ளன.
சாங்கி விமான நிலையக் குழுமத்துக்குச் செலுத்த வேண்டிய ‘பயணிச் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணம்’ (பிஎஸ்எஸ்எஃப்), ஜூலையில் 41 வெள்ளியாக உயரவுள்ளது. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது 44 வெள்ளியாக மீண்டும் உயரும். அதைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 47 வெள்ளியாகும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.
தற்போது இந்தக் கட்டணம் $25.90 ஆகும்.
சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளிடமிருந்து சாங்கி விமான நிலையக் குழுமம் தற்போது $46.40 பிஎஸ்எஸ்எஃப் கட்டணத்தை வசூலித்து வருகிறது.
குழுமத்தின் செயல்பாடுகளுக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிக்குமான செலவுகளுக்கு இந்தக் கட்டணம் உதவுவதாக குழுமம் தெரிவித்தது.
சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கு சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஎஎஎஸ்) விதிக்கும் விமானப் போக்குவரத்துத் தீர்வை, $3.10. இது ஜூலை முதல் 8 வெள்ளியாக உயரவுள்ளது.
இதே தொகையை சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளிடமிருந்து ஆணையம் வசூலித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆணையத்தின் மிக அண்மைய வருடாந்தர அறிக்கையின்படி, $89.8 மில்லியன் மதிப்பிலான விமானப் போக்குவரத்துத் தீர்வையை, 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டில் சிஎஎஎஸ் வசூலித்தது.
இதுவே ஆணையத்தின் இரண்டாவது மிகப் பெரிய வருவாய் மூலமாகும்.
விமானப் போக்குவரத்துத் தீர்வை, பிஎஸ்எஸ்எஃப் இரண்டுமே விமானப் பயணச்சீட்டை வாங்கும் பயணிகளுக்கு விதிக்கப்படுபவை. சிங்கப்பூரை விட்டு வர்த்தக விமானங்கள், தனியார் விமானங்கள் போன்றவற்றில் புறப்படும் பயணிகளுக்கு இவ்விரு கட்டணங்களும் பொருந்தும்.
கொவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தால் சிலேத்தார் விமான நிலையத்தில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
விமானிகளுக்கான பயிற்சியையும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மாற்றியமைத்தலுக்கான விமானப் பயணங்களையும் உள்ளடக்கிய வர்த்தக, பொது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது சிலேத்தார் விமான நிலையம்.


