பேரிழப்பு ஏற்படுத்திய இருவகை மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் ஜனவரி மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் அதிகாரிகள் $1.32 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையைப் பறிமுதல் செய்துள்ளனர். இதன் தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தல், முதலீட்டு மோசடி ஆகியவை தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இவ்வகை மோசடிகளில் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்ததைக் காவல்துறை பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டியுள்ளது.
ஜனவரி 2ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையே வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவின் மோசடி ஒழிப்புத் தளபத்தியம், காவல்துறையின் மோசடிக்கு எதிரான நடவடிக்கைக் குழுக்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து பணியாற்றினர். மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் இழந்த தொகை யாரிடம் உள்ளது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இந்த நடவடிக்கையை அடுத்து 400க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மோசடி மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் $1.32 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவும் வகையில் மோசடிக்காரர்களுக்குத் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியோரைக் கண்டுபிடிப்பதிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆண்கள் 37 பேரும் பெண்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 80 பேரிடம் விசாரணை தொடர்கிறது.
மோசடிக்காரர்கள் அரசாங்க அதிகாரிபோல் நடித்த சம்பவங்களில், பாதிக்கப்பட்டோருக்கு முதலில் வங்கியிலிருந்து பேசுவதாகத் தொலைபேசி அழைப்பு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கு சந்தேகத்துக்குரிய அல்லது மோசடியான பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டதாக மோசடிக்காரர்கள் அவர்களிடம் கூறினர்.
பாதிக்கப்பட்டோர் அதை நிராகரித்தபோது அந்த அழைப்பு வேறொருவருக்கு மாற்றிவிடப்பட்டது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரிகள் என்ற போர்வையில் மோசடிக்காரர்கள் அவர்களிடம் பேசினர்.
பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையைப் பாதுகாப்பான கணக்குக்கு மாற்றும்படி கூறி மோசடிக்கார்கள் தங்கள் வலையில் வீழ்த்தினர் என்று கூறப்பட்டது.
முதலீட்டு மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் இணையத்தளங்கள் அல்லது இணைய விளம்பரங்கள் மூலம் லாபகரமான முதலீடு என்று கூறப்பட்டதால் போலியான முதலீட்டுத் திட்டங்களில் இணைந்து பணத்தை இழந்தனர்.
விசாரணை தொடர்வாதாகக் காவல்துறை கூறியது.

