சிங்கப்பூரில் இளையர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட மிக இளைய போதைப்பொருள் புழங்கிக்கு வெறும் 12 வயதுதான்.
கைது செய்யப்பட்ட 1,165 புதிய போதைப்பொருள் புழங்கிகளில் பாதிப் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
2025ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 30 வயதுக்குட்பட்ட புதிய போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடாகவும், 20 வயதுக்குட்பட்ட புதிய போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 22 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை மூலம் இவ்விவரங்கள் தெரியவந்துள்ளன.
போதைப்பொருள் புழங்கும் பெண்களின் விகிதம் மற்றுமொரு கவலையளிக்கும் போக்காக உள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 24 விழுக்காடு அதிகரித்து 594ஆக உயர்ந்தது. 2024ல் அந்த எண்ணிக்கை 478ஆக இருந்தது.
இருப்பினும், சிங்கப்பூரின் போதைப்பொருள் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கைதுசெய்யப்பட்ட புதிய போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 2024ல் 996ஆக இருந்த நிலையில், 2025ல் அது 17 விழுக்காடு கூடி 1,165 ஆனது.
அதேவேளையில், மீண்டும் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் புழங்கிகளின் எண்ணிக்கை 2024ல் 2,179ஆக இருந்த நிலையில் அது 2025ல் ஆறு விழுக்காடு குறைந்து 2,043 ஆனது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இயக்குநர் செபாஸ்டியன் டான், இளையர்கள் மத்தியில் போதைப்பொருள் பிரச்சினை தொடர்ந்து ஒரு கவலையாகவே உள்ளது என்றார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உரிய பங்காளிகளுடன் அணுக்கமான இணைந்து பணியாற்றி, வலுவான சட்ட அமலாக்கம், சமூக ஈடுபாடு, போதைப்பொருள்களின் தீமைகள் குறித்த கல்வி ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரைப் பாதுகாப்பான, போதைப்பொருள் இல்லாத நாடாக வைத்திருக்க முயற்சிகளைத் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட போதைப் பொருளாக மெத்தம்ஃபெட்டமைன் இருந்தது. அதைத் தொடர்ந்து ஹெராயினும் கஞ்சாவும் உள்ளன.
2025ஆம் ஆண்டில் இனவாரியான போதைப்பொருள் புழங்கிகளின் விகிதம் 2024ஐ போலவே இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் ஆவர்.
உலக போதைப்பொருள் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டின் போதைப்பொருள் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
உலகில் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டோரில் ஆறு விழுக்காட்டினர் கடந்த 12 மாதங்களில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.

