சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (எஸ்ஐடி) 2023ஆம் ஆண்டில் பட்டம்பெற்ற புதிய பட்டதாரிகள், கூடுதலான தொடக்கச் சம்பளத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டம்பெற்ற பிறகு வேலை கிடைத்தோரின் எண்ணிக்கை குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு முழுநேர நிரந்தர வேலையில் இருந்தோரின் இடைநிலை மொத்த மாதாந்தரச் சம்பளம் $4,000ஆக இருந்ததை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிட்ட ஆக அண்மைய வேலைவாய்ப்புக் கருத்தாய்வின் முடிவுகள் காட்டின.
அது, 2022ஆம் ஆண்டில் இருந்த $3,950ஐக் காட்டிலும் அதிகம்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகளைப் பொறுத்தவரை, இதுவே ஆக அதிகமான இடைநிலை மொத்த மாதாந்தரச் சம்பளமாகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஆக அண்மையப் புள்ளிவிவரங்கள் வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட்டிருப்பதையும் காட்டுகின்றன.
சென்ற ஆண்டு 81.4 விழுக்காட்டுப் பட்டதாரிகளுக்கு முழுநேர நிரந்தர வேலைகள் கிடைத்தன. 2022ஆம் ஆண்டில், அது 86.6 விழுக்காடாக இருந்தது.
ஒட்டுமொத்தத்தில், பகுதிநேர, தன்னுரிமைத் தொழில் புரிவோரைச் சேர்த்தால் அந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளில் 88.5 விழுக்காட்டினருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. 2022ஆம் ஆண்டில் பதிவான 91.6 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு.
தொடர்புடைய செய்திகள்
கூட்டுத் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் பட்டதாரி வேலைவாய்ப்பு குறித்த வருடாந்தரக் கருத்தாய்வில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சென்ற ஆண்டு பட்டம்பெற்ற 2,412 பட்டதாரிகளில், 78 விழுக்காட்டினர் அல்லது 1,881 பட்டதாரிகள் கருத்தாய்வில் பங்கெடுத்தனர்.
மற்ற தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களுக்கான கருத்தாய்வின் முடிவுகள், இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் புதிய பட்டதாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சென்ற ஆண்டு கூடுதலாக $4,313 என்ற இடைநிலை மொத்தச் சம்பளத்தைப் பெற்றனர்.


