சிங்கப்பூரின் ‘அவசரகால மருத்துவத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் மருத்துவப் பேராசிரியர் வெங்கட்ராமன் அனந்தராமனும் ;ரோட்டாவைரஸ்’ தடுப்பூசி பரிசோதனைகளை வழிநடத்திய குழந்தை நல மருத்துவர் புவா கொங் பூவும் இந்நாட்டின் ஆக உயரிய மருத்துவ விருதைப் பெற்றனர்.
லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியின் மருத்துவ அறிவியல் கட்டடத்தில், சிங்கப்பூர் மருத்துவ அகாடமியிடம் இருந்து ‘தலைசிறந்த கல்வியாளர்’ (Eminent Academician) பட்டத்தைச் சனிக்கிழமை (செப்டம்பர் 12) பெற்ற 17 முன்னோடி மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களில் இவர்களும் அடங்குவர்.
இதற்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், வாழ்நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ள மருத்துவர்களை இந்தப் பட்டம் கௌரவிக்கிறது என்று கூறினார்.
1970களில் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகத் தமது பணியைத் தொடங்கியபோது, அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் தரம் குறித்து அதிருப்தி அடைந்ததாகவும் பேராசிரியர் அனந்தராமன் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“அதுவே அவசரகால சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதற்கான உந்துதலாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.
மருத்துவமனைகளைத் தாண்டி, தெருக்களில் மயங்கி விழுபவர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்களுக்கு உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொடுக்கவும் பேராசிரியர் அனந்தராமன் முற்பட்டார்.
1990களில் தேசிய புத்துயிரூட்டல் மன்றத்தை (National Resuscitation Council) உருவாக்க அவர் உதவினார்.
1986ஆம் ஆண்டு ஹோட்டல் நியூ வேர்ல்ட் இடிந்து விழுந்த பிறகு, பேரிடர்களின் போது மருத்துவ உதவி வழங்கப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய சிங்கப்பூர் விரும்பியது. இதற்காக அவர் வகுத்த திட்டத்தை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டது.
கே கே பெண்கள் சிறார் மருத்துவமனையின் ஒய்வுபெற்ற கௌரவ ஆலோசகரான டாக்டர் புவா, 2000களின் முற்பகுதியில் பிள்ளைகளுக்கான புதிய ரோட்டாவைரஸ் தடுப்பூசி குறித்த மருத்துவ ஆய்வுகளை வழிநடத்தினார்.
அத்துடன், மாறுபட்ட அறிகுறிகளுடன் இருந்த ஆறு வயது நோயாளி ஒருவருக்குச் சிகிச்சையளித்ததன் வழி, ‘பிகேபி சிண்ட்ரோம்’ (PKB syndrome) எனப்படும் அரிய மரபணு நோயையும் டாக்டர் புவா அண்மையில் கண்டுபிடித்தார்.

