தாதி ஒருவர், தமது பணியானது ஒரு நோயாளியின் உடல்நலக் குறைபாட்டிற்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், அந்த நபரைப் பராமரிப்பதையும் உள்ளடக்கியது என்று நம்புகிறார்.
மற்றொரு தாதி, தாம் பராமரிக்கும் நபர்களின் நிலையில் தம்மை வைத்துப் பார்க்கிறார். மூன்றாவது தாதி, நோயாளிகளுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஆதரவளிக்கும்போது, தமது மருத்துவக் கடமைகளைத் தாண்டிச் செயல்படுகிறார்.
செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 17), இவர்கள் மூவரும் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட தாதியருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, வருடாந்தர ‘டான் சின் துவான் தாதி’ விருதைப் பெற்றுக்கொண்டனர்.
சுகாதாரப் பராமரிப்பு புத்தாக்கத்திற்கான இங் டெங் ஃபோங் நிலையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சித்தி ஸுபைடா முகம்மது இப்ராகிம், வசந்தி கிருஷ்ணன், நான்சி சூன் ஆகியோர் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வென்றனர்.
இரண்டாம் பரிசு பெற்ற திருவாட்டி வசந்தி, ஒரு முதன்மை தாதிமைப் பயிற்றுவிப்பாளராக தாதியர், பதிவுபெற்ற தாதியர், அடிப்படை பராமரிப்பு உதவியாளர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகிறார். அவர் ஆண்டுதோறும் சராசரியாக 10 புதிய தாதியருக்கு (மாணவத் தாதியர் உட்பட) வழிகாட்டுகிறார்.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் முதன்மை பதிவுபெற்ற தாதியாகப் பணியாற்றும் 55 வயதான அவர், நோயாளிகள் குணமடைந்து, இறுதியில் நலமுடன் வீட்டிற்குத் திரும்புவதைக் காண்பதே தாதியர் பணியில் மிகவும் மனநிறைவைத் தரும் தருணங்களில் ஒன்று என்று கூறுகிறார்.
“மறுவாழ்வு தாதிமைத் துறையில் எனக்கு இருந்த அனுபவம், இந்தத் தொழிலின் மீதான எனது ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தியது. எனது 40 வயதுகளின் பிற்பகுதியில் இருந்தபோது, என்னைப் போன்ற வயதுடைய, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நான் கவனித்துக்கொண்டேன். அவர்களில் சிலருக்குச் சிறு குழந்தைகளும் இருந்தனர். எனக்கு இது போன்றதொரு நிலை ஏற்பட்டால், என் குழந்தைகளின் கதி என்னவாகும் என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். இது, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் குணமடைய ஆதரவளிக்கவும், அவர்கள் மீண்டும் சுதந்திரமாகச் செயல்பட உதவவும் என்னை இன்னும் உறுதியுடன் செயல்படத் தூண்டியது” என்று திருவாட்டி வசந்தி கூறினார்.
வசந்திக்கு ஒரு தங்கப் பதக்கமும், $3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
பதிவுபெற்ற பிற ஒன்பது தாதியருக்கு விருதுகளும், தலா $800 ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம். ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டிரேடிங் கம்பெனி’ நிறுவனத்தின் தலைவரும் டான் சின் துவானின் பேத்தியுமான சூ கெக் கிம், இந்த விருதை உருவாக்கிய டெல்லா லீ ஆகியோர் வழங்கினர்.
