சிங்கப்பூரில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான டெங்கி பாதிப்புக்கான உச்சக்கட்டக் காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 53 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதுவே 2026ஆம் ஆண்டில் பதிவான ஆக அதிக வாராந்திர எண்ணிக்கையாகும். தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத் தகவல்களின்படி, மே 23ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த 53 டெங்கி சம்பவங்கள் பதிவாகின.
அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 26 ஆக இருந்தது. திங்கட்கிழமை (மே 25) தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ஆறு டெங்கி குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்ட ‘உச்சக்கட்ட விழிப்புநிலை’ கொண்ட பகுதிகள் எதுவும் இதில் இல்லை.
தற்போது கண்டறியப்பட்டுள்ள குழுமங்களில் பிரேடல் ஹில் (பிரேடல் வியூ), டெஃபு சவுத் ஸ்திரீட் 1, டெப்போ சாலை (புளோக் 110ஏ, 111ஏ) ஆகியவை அடங்கும். மற்ற மூன்று குழுமங்களும் வடகிழக்கு வட்டாரத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 600க்கும் மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 66 விழுக்காடு குறைவாகும்.
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் டெங்கி பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, தங்களின் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாதபடி சுற்றுப்புறத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் வலியுறுத்தியுள்ளது.

