சிங்கப்பூர், மூப்படையும் சமூகத்தின் தேவைகளைச் சமாளிக்க பல்வேறு வசதிகளைப் பல இடங்களிலும் செய்து வருகிறது. சாங்கி விமான நிலையத்தில் உருவாகவிருக்கும் ஐந்தாம் முனையத்திலும் அத்தகைய வசதிகள் இடம்பெறவிருக்கின்றன.
சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘டி5 இன் தி மேக்கிங்’ (T5 In The Making) கண்காட்சியில் மூத்தோருக்கான சிறப்பு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சாங்கி விமான நிலையத்தில் 49 ஆண்டுகளாகப் பணிபுரிந்து, பணி ஓய்வுக்குப் பிறகும் தற்போது மேலாளராகப் பணியாற்றுகிறார் திரு புண்ணியமூர்த்தி முத்துசாமி 70.
“1977ல் இங்கு வேலை செய்யத் தொடங்கிய நான் சாங்கி விமான நிலையத்தின் வளர்ச்சியைக் கண்டு வியக்கிறேன்,” என்றார் அவர்.
“ஆரம்பத்தில் இரண்டே கட்டடங்களுடன் செயல்பட்ட இந்த இடத்தில் இப்போது ஐந்து முனையங்கள் அமைவது இதன் இமாலய வளர்ச்சியைக் காட்டுகிறது. சாங்கி விமான நிலையம் தொழில்நுட்ப ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது,” என்றார்
சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையத்தில் மூத்தோரின் பயணத்தை எளிதாக்க உதவும் நடமாட்டச் சாதனம் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படும்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தச் சாதனம் ஒரே நேரத்தில் ஒரு பயணியையும் அவரது உடைமைகளையும் கொண்டுசெல்ல உதவுகிறது.
புதிய முனையத்தில் இடம்பெறவுள்ள மேலும் சில சிறப்பு அம்சங்களையும் கண்காட்சியில் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை (ஜனவரி 5) நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், “செயற்கை நுண்ணறிவு, தானியக்கத் தொழில்நுட்பம் ஆகியவை விமானப் போக்குவரத்தின் எதிர்காலமாக அமையும்,” என்றார்.
“கண்காட்சியில், பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் புதிய முனையத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைக் காணலாம்,” என்றார் அவர்.
ஐந்து பகுதிகள் கொண்ட இந்தக் கண்காட்சியில் சிங்கப்பூரின் விமானத் துறையின் வளர்ச்சியுடன் எதிர்காலத் திட்டங்களும் விளக்கப்பட்டுள்ளன.
சாங்கி விமான நிலையத்தின் கட்டுமானத் தொடக்கம், அதற்கான நிலமீட்புப் பணிகள், ஒன்றாம் முனையத்திலிருந்து நான்காம் முனையம் வரையிலான வளர்ச்சி ஆகியவற்றையும் கண்காட்சி சித்திரிக்கிறது.
மேலும், புதிய முனையத்தின் பிரம்மாண்ட வடிவமைப்பு, அங்குப் பயன்படுத்தப்படும் நவீன ‘ரோபோட்டிக்ஸ்’ தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்துச் செயற்கை நுண்ணறிவுமூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் வாயிலாக எதிர்கால விமானப் பயணத்தை கண்முன் கொண்டுவருகிறது இக்கண்காட்சி.
கண்காட்சி மூன்றாம் முனையத்தின் வருகைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து செயல்படும் இக்கண்காட்சிக்குச் செல்ல விரும்புவோர் https://t5inthemakingreg.changiair[Ϟ]port.com/register-now என்ற இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.
கண்காட்சியைக் காண வந்திருந்த திரு மோகன் கிருஷ்ணசாமி, 37, “தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இந்தக் கண்காட்சியில் காண முடிந்தது. பயணப் பைகள் எவ்வாறு ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இயந்திரக் கைகளைக் கொண்டு நகர்த்தப்படுகின்றன போன்றவற்றையும் பார்த்தேன்,” என்றார்.

