ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் மீட்கப்பட்ட இமயமலைக் கழுகு மாண்டது

2 mins read
82c4c547-32ac-41e3-9163-01b15f834ef5
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் இம்மாதம் 11ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட இமயமலையைச் சேர்ந்த பிணந்தின்னிக் கழுகு உடல்நலக் குறைவால் மாண்டது. - படம்: ஏக்கர்ஸ்

சிங்கப்பூரில் இம்மாதம் 15ஆம் தேதி மீட்கப்பட்ட இமயமலையைச் சேர்ந்த பிணந்தின்னிக் கழுகு ஒன்று உடல்நிலை சரியின்றி மாண்டதை ஏக்கர்ஸ் வனவிலங்கு மீட்பு அமைப்பு திங்கட்கிழமை (ஜனவரி 19) உறுதிசெய்துள்ளது.

அந்தக் கழுகு, ஏற்கெனவே சிறுநீரகம், இரைப்பைக் குடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்ததை ஏக்கர்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் பாலகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார். அது பதற்றத்தாலும் சோர்வாலும் மேலும் மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கழுகின் உடல் லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் இம்மாதம் 11ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட இமயமலையைச் சேர்ந்த பிணந்தின்னிக் கழுகை ஏக்கர்ஸ் அமைப்பு மீட்டது.

“சிகிச்சை அளிக்கப்பட்டபோது கழுகின் உடல்நலம் தேறிவருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உட்புறங்களில் இருப்பது கழுகுக்கு உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் வெளிப்புறத்தில் ஒரு கூண்டை ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம்,” என்றார் திரு கலைவாணன்.

ஆனால், திடீரென கழுகின் உடல்நிலை மோசமடைந்து 12 மணி நேரத்துக்குள் கவலைக்கிடமானது. கழுகுக்கு அவசரச் சிகிச்சை அளித்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. சிகிச்சையின்போதே கழுகு இறந்தது,” என்று திரு கலைவாணன் விளக்கம் அளித்தார்.

சிங்கப்பூரில் இமயமலையைச் சேர்ந்த ஒரு கழுகு இறந்தது இது இரண்டாவது முறை.

தேசியப் பூங்காக் கழகம் இதற்குமுன் இம்மாதம் 7ஆம் தேதி மீட்ட இமயமலைக் கழுகு ஒன்று உடல்நலக் குறைவால் கருணைக் கொலைச் செய்யப்பட்டது.

அதன் உடலும் லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏக்கர்ஸ் அமைப்பு சொன்னது.

இம்மாதம் 4ஆம் தேதி கிளமெண்டியில் உள்ள மாஜூ வனப்பகுதியில் இமயமலையைச் சேர்ந்த பிணந்தின்னிக் கழுகுகள் அதிகளவில் காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்