தைப்பூச ஊர்வலம் : ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும்

தைப்பூச ஊர்வலம் : ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும்

2 mins read
b5780432-65bf-4e43-aed1-d492a4e9439f
இறை தரிசனம் செய்ய மக்கள் வரும்போது நான்கு, ஐந்து நிமிடங்கள் நிற்க விரும்புவதாகக் கூறிய அமைச்சர் கா. சண்முகம், இதே போல 10, 12 பேர் செய்யும்போது ஏறத்தாழ ஒரு மணி நேரம் தாமதமாகிறது என்று கூறினார். - படம்: பே.கார்த்திகேயன்

தைப்பூசத்திற்கான ஏற்பாடுகள் முழுமையாக மறு ஆய்வு செய்யப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம், வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச ஊர்வல ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தபோதும் மேம்பாடுகளும் தேவைப்படுவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியதைக் கருத்தில்கொள்வதாக வாரியம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டன.

“நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குள் நுழைவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைத்து பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்துவது குறித்து திரு சண்முகம் உரைத்த கருத்துகளை ஏற்றுக்கொள்கிறோம்,” என்று அறிக்கையில் கூறப்பட்டது.

“வேண்டுதல்களை நிறைவேற்றச் சந்நிதியை அடைவதற்குப் பக்தர்கள் பலர் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதை ஒப்புக்கொள்கிறோம். அவர்களது பொறுமையையும் பக்தியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

“இந்த நிலைமையைக் கையாள நாங்கள் இந்த ஆண்டின் தைப்பூச ஏற்பாடுகளை முழுமையாக மறுஆய்வு செய்வோம். தளவாட ஏற்பாடுகளையும் செயலாக்கச் சவால்களையும் ஆராயவுள்ளோம். மேம்படுத்துவற்கான அம்சங்களைக் கண்டறிய எங்களுக்கு உதவுவதற்காகப் பக்தர்களிடத்திலிருந்தும் மற்ற பங்காளிகளிடமிருந்தும் கருத்துகள் திரட்டப்படும். 

“பக்தர்களின் பாதுகாப்பு, நலம் ஆகியவற்றுடன் ஏற்பாடுகள் சுமுகமாக இருப்பதற்கு நாங்கள் தலையாய முன்னுரிமை வழங்குகிறோம். அர்த்தமுள்ள, ஆன்மிக மதிப்புள்ள கொண்டாட்டம் என்ற முறையில் அதன் முக்கியத்துவத்தைக் காக்கும் அதே நேரத்தில், தைப்பூச அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

காத்திருப்பு நேரம் குறித்து தைப்பூசத் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம்,  ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார். இருந்தபோதும், நடைமுறை மேம்படலாம் என்றும் அவர் கூறினார்.

“பக்தர்களிடம் நான் பேசியபோதும் அவர்களில் பால்குடம் ஏந்தியவர்கள் சிலர் இரண்டு, இரண்டரை, மூன்று மணி நேரம் வரையிலும் காத்திருந்ததாகக் கூறினர். இதைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் செய்யலாம் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு சண்முகம்.

“ஆலய மூலவரைத் தரிசிக்க மக்கள் வரும்போது நான்கு, ஐந்து நிமிடங்கள் நிற்க விரும்புவர். இதே போல 10, 12 பேர் செய்யும்போது ஏறத்தாழ ஒரு மணி நேரம் தாமதமாகிறது,” என்றும் அவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்