ஒரே மேடையில் போப் ஃபிரான்சிசுடன் கலந்துரையாடும் வாய்ப்பு இந்து இளையர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் செப்டம்பர் 13ஆம் தேதி இளையர் குழுவுடன் போப் ஃபிரான்சிஸ் கலந்துரையாடுகிறார்.
கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியில் சமயங்களுக்கு இடையிலான அந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் இளையர்களில் ஒருவராக 28 வயது ஷுகுல் ராஜ் குமார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
போப் ஃபிரான்சிசின் 12 நாள் ஆசிய-பசிபிக் பயணத்தின் இறுதி நாளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
ஏறக்குறைய 600 பேர் இதில் பங்கேற்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் சமய அமைப்புகளைச் சேர்ந்த இளையர்கள் ஆவர்.
சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் அனைத்து சமய கலந்துரையாடல்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று திரு ஷுகுல் நம்புகிறார்.
தற்போது அனைத்து சமய நிறுவனத்தின் இளையர் பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார். இக்குழுவில் பத்து சமயங்களைச் சேர்ந்த 134 இளையர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்ஜிடெக் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றும் ஷுகுல், அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஜூலை மாதம் அவருக்கு அந்த ஆச்சரியமான அழைப்பு வந்தது.
“முதலில் அதிர்ச்சியாக இருந்தது, பின்னர் நன்றியுணர்வு ஏற்பட்டது, பின்னர் மனஅழுத்தம் எற்பட்டது. இது, எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவம், நிச்சயம் இதை முழு நீதி அளிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் தெரிவித்தார்.
“இதுபோன்ற ஒரு தருணத்திற்கு எவ்வளவு தயாராக செய்தாலும் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து நிம்மதி ஏற்படுகிறது,” என்றார் அவர்.
“போப் நிறைய செய்து வருகிறார். நீங்கள் அவரைப் பற்றி விரிவாகப் படித்திருந்தால் பல்வேறு சமூகங்களுக்கு அவர் செய்து வரும் அரும்பணியைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.
“போப் ஃபிரான்சிசைச் சந்திப்பது, ‘நான் யார்’, ‘இதுவரை என்ன செய்து இருக்கிறேன்’,” என்பதையும் உணர வைக்கிறது என்று ஷுகுல் கூறினார்.
தமிழ் முரசிடம் பேசிய ஷுகுல், போப் பிரான்சிசைச் சந்திப்பதற்கு முன்பு அவருடைய வளர்ப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் அவரது உலகக் கண்ணோட்டத்தையும் தலைமைத்துவ பாணியையும் எவ்வாறு வடிவமைத்துள்ளன என்பதைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று கூறினார்.
செப்டம்பர் 11 முதல் 13 வரை போப் ஃபிரான்சிஸ் சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை வரவேற்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. இதன் பின்னணியில் 5,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஜனவரியிலிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.

