‘எச்ஐபி’: இரு தியோங் பாரு புளோக்குகளுக்கு மறுவாக்கெடுப்பு நடத்தப்படக்கூடும்

2 mins read
6b07b9ba-e68b-497c-9379-a4e8a29a7976
கிம் செங் ஸ்திரீட் புளோக் 34, லிம் லியேக் ஸ்திரீட் புளோக் 35 ஆகியவை ஆகியவை எச்ஐபி சம்பந்தப்பட்ட புளோக்குகளாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எச்ஐபி எனப்படும் இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்குத் தகுதிபெற தியோங் பாருவில் உள்ள இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளுக்கு மறுவாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த வாக்கெடுப்பில் இந்த இரு புளோக்குகளும் குறுகிய வித்தியாசத்தில் எச்ஐபி திட்டத்துக்குத் தகுதிபெறாமல் போனதையடுத்து மீண்டும் வாக்களிக்க குடியிருப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படக்கூடும் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செஸியாங் தெரிவித்துள்ளார். மறுவாக்கெடுப்பு நடத்த குடியிருப்பாளர்களிடையே போதுமான ஆதரவு இருக்கவேண்டும் என்று அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 4) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சென்ற வாக்கெடுப்பில் வாக்களிக்காத, எச்ஐபி வேண்டாம் என்று வாக்களித்த வீடுகளில் வசிப்போரைத் தாமும் தமது அடித்தளத் தொண்டூழியர்களும் தொடர்ந்து தொடர்புகொண்டு அவர்களின் அக்கறைகளைத் தெரிந்துகொண்டு கவனித்துக்கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

“குடியிருப்பாளர்கள் வலுவான ஆதரவு வழங்கினால் மறுவாக்கெடுப்பு நடத்த நான் வீவகவிடம் கோரிக்கையை முன்வைப்பேன்,” என்றார் திரு ஃபூ.

கிம் செங் ஸ்திரீட்டில் உள்ள புளோக் 34, லிம் லியேக் ஸ்திரீட்டில் உள்ள புளோக் 35 ஆகியவை எச்ஐபி சம்பந்தப்பட்ட புளோக்குகளாகும்.

எச்ஐபி திட்டத்துக்குத் தகுதிபெற ஒரு புளோக்கின் 75 விழுக்காட்டுக் குடியிருப்பாளர்கள் அதற்கு சாதகமாக வாக்களிக்கவேண்டும். நவம்பர் மாத வாக்கெடுப்பில் கிம் செங் ஸ்திரீட் புளோக் இரு வாக்குகள் வித்தியாசத்திலும் லிம் லியேக் ஸ்திரீட் புளோக் ஒரு வாக்கு வித்தியாசத்திலும் தேவையான வாக்குகளைப் பெறாமல் போயின.

இவ்விரு புளோக்குகளும் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் 29 வீவக புளோக்குகள் உள்ளன. எஞ்சிய 27 புளோக்குகளுக்கான வாக்கெடுப்பு எச்ஐபி பணிகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக அமைந்தன.

அந்த 29 புளோக்குகளும் 1949ஆம் ஆண்டு கட்டப்பட்ட நான்கு தள புளோக்குகளாகும். வீவகவின் முன்னோடியான சிங்கப்பூர் மேம்பாட்டு அறக்கட்டளை (Home Improvement Trust) அந்த புளோக்குகளைக் கட்டியது.

குறிப்புச் சொற்கள்