திரு லுத்ஃப்ஹில் ஹாடி அஸ்மான் 12 வயதாக இருந்தபோது, தமது இடது காலில் வலியை உணரத் தொடங்கியதாகக் கூறினார்.
விட்டு விட்டு வரும் அந்த வலி, வேகமாக நடந்தாலோ ஓடுவதாலோ அதிகரிக்கும்.
தசை வலி என முதலில் கூறிய குடும்ப மருத்துவர், தொடக்கத்தில் வலிநீக்கிகளைப் பரிந்துரைத்தார்.
கடுமையான அந்த வலியால் அவர் பலமுறை நடக்கத் தடுமாறினார்; வேதனையால் கண்ணீர் சிந்தினார்.
ஓராண்டு இந்நிலை நீடித்த பிறகுதான், ஆசிரியர் ஒருவரின் ஆலோசனைப்படி திரு ஹாடி மருத்துவரை நாடினார்.
பலதுறை மருந்தகத்திற்கு முதலில் சென்ற திரு ஹாடி, பின்னர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு அவருக்கு ‘ஸ்லிப்ட் கேப்பிடல் ஃபிமொரல் எப்பிபிசிஸ்’ (slipped capital femoral epiphysis) என்ற நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இடுப்பைப் பாதிக்கும் இந்த அரிய நோய், 10 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளைப் பாதிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தொடை எலும்பின் தலைப்பகுதி, ‘வளர்ச்சித் தட்டிலிருந்து’ (growth plate) நழுவி விலகும்போது இந்தக் கோளாறு ஏற்படுகிறது.
வளர்ச்சித் தட்டு என்பது எலும்பு வளரும் முனையில் இருக்கும் மென்மையான எலும்புப் பகுதியைக் குறிப்பதாகும்.
மற்ற பல்வேறு சிகிச்சைகள் பலனளிக்காததை அடுத்து, திரு ஹாடி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
“இந்த நோய்க்கான காரணம் என்னவென்று முடிவாகத் தெரியாதபோதும், அளவுக்கு மீறி உடற்பருமனாக இருப்பது இந்நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்,” என்று தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ லிம் தெரிவித்தார்.
மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும், மற்ற பல நிவாரண நடவடிக்கைகளுக்குப் பிறகும் திரு ஹாடியின் வலி குறைந்தது.
தற்போது ஜூரோங் வெஸ்டிலுள்ள விரைவு உணவகம் ஒன்றில் பணியாற்றும் திரு ஹாடி, தமது எட்டு மணி நேர வேலையில் வேதனையின்றித் தொடர்ந்து நிற்க இயல்வதாகக் கூறுகிறார்.
கடலில் மீன் பிடிப்பது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றை வருங்காலத்தில் செய்ய விரும்புவதாகவும் திரு ஹாடி ஆர்வத்துடன் கூறினார்.

