தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் 4ஆம் காலாண்டில் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பது குறையக்கூடும்: கருத்தாய்வு

2 mins read
e50e61e6-bc49-45c5-a745-d0ffbe7bed2b
இவ்வாண்டின் (2025) நாலாம் காலாண்டுக்கான நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டக் குறியீடு மீண்டும் 20 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு மெதுவடையக்கூடும் என்று கருத்தாய்வு ஒன்று கூறுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அது உலகச் சராசரியுடன் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆட்சேர்ப்பு நிறுவனமான மேன்பவர்குரூப் (ManpowerGroup) காலாண்டுக்கு ஒரு முறை நடத்திய கருத்தாய்வில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. கருத்தாய்வு அறிக்கை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிடப்பட்டது.

இவ்வாண்டின் (2025) நாலாம் காலாண்டுக்கான நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டக் குறியீடு மீண்டும் 20 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. ஏறக்குறைய மூவாண்டுகளில் குறியீடு ஆகக் குறைவான விகிதத்தை எட்டியுள்ளது. உலக அளவில் 42 சந்தைகளுடன் ஒப்பிடுகையில் அது மூன்று விழுக்காட்டுப் புள்ளி குறைவு. உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் எதிரொலியாக அது பார்க்கப்படுகிறது.

நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டக் குறியீடு என்பது புதிதாக வேலைக்கு ஆள்களை எடுப்பதில் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கின்றன என்பதை அளவிடுகிறது.

ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 524 நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி, தற்போதைய ஊழியர் எண்ணிக்கையைக் கட்டிக்காக்கப்போவதாகக் கூறின. 37 விழுக்காட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கத் திட்டமிடுகின்றன. 17 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்க எண்ணுகின்றன. ஒரு விழுக்காட்டு நிறுவனங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

போக்குவரத்து, தளவாட, மோட்டார்வாகனத் தொழில்துறைகள் வேலைக்கு ஆள் எடுக்கத் திட்டமிடுகின்றன. அவற்றில் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டக் குறியீடு 48 விழுக்காடாக உள்ளது. உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடுகையில் அது 24 விழுக்காட்டுப் புள்ளி அதிகம். உலக அளவில் சிங்கப்பூர் தளவாட நடுவமாகக் கருதப்படுதவதே அதற்கு முக்கியக் காரணம் என்கிறார் மேன்பவர்குரூப் நிறுவனத்தின் நிர்வாகி திருவாட்டி லிண்டா டியோ.

சுகாதாரப் பராமரிப்பு, உயிர் அறிவியல் துறைகளைப் பொறுத்தவரை நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டக் குறியீடு 38 விழுக்காடாக உள்ளது. தொடர்புச் சேவைத் துறை 28 விழுக்காட்டுடன் மூன்றாம் நிலையில் இருக்கிறது.

தகுதியான ஊழியர்களைப் புதிய வேலைகளுக்கு ஈர்ப்பதே சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் என்றும் கருத்தாய்வு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்