சிங்கப்பூர் முதலாளிகள் இடையே வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு அதிகரிப்பு

சிங்கப்பூர் முதலாளிகள் இடையே வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு அதிகரிப்பு

2 mins read
0c0a690a-d349-4487-9bf9-e7786e266ded
இரண்டாம் காலாண்டுக்கான சிங்கப்பூரின் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் 24 விழுக்காடாகப் பதிவானது. - கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முதலாளிகளிடையே வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாக ‘மேன்பவர் குரூப்’ வெளியிட்ட கருத்தாய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த இரண்டு காலாண்டுகளில் அப்போக்கு தொடர்ந்து குறைந்திருந்தது.

மத்திய கிழக்குப் போர் தொடங்கியதற்கு முன்னர், ஜனவரி 1ஆம் தேதிக்கும் பிப்ரவரி 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், 530 சிங்கப்பூர் முதலாளிகள் இடையே கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாம் காலாண்டுக்கான சிங்கப்பூரின் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் 24 விழுக்காடாகப் பதிவானது. அதற்கு முந்தைய காலாண்டைக் காட்டிலும் அது 10 புள்ளிகள் அதிகம். ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அது மூன்று புள்ளிகள் குறைவு.

முதலாளிகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் (45 விழுக்காடு) ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 21 விழுக்காட்டினர் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினர். 33 விழுக்காட்டினர் ஊழியர் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று கூறியதாக ‘மேன்பவர் குரூப்’ தெரிவித்தது.

இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ள ஆள் எடுக்கும் போக்கு, மாறிவரும் வர்த்தகத் தேவைகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முதலாளிகள் எடுக்கும் முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக ‘மேன்பவர் குரூப் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் மேலாளர் லிண்டா தியோ கூறினார்.

வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு தகவல்துறையில் ஆக ஆக்கபூர்வமாக இருந்தது. அதில் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் 41 விழுக்காடாகப் பதிவானது.

கட்டுமான, சொத்துச் சந்தை துறைகள் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.

பயனீட்டு, இயற்கை வளத் துறையில், நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் பூஜ்ஜியத்திற்குக் கீழ் 11 விழுக்காடாகப் பதிவானது.

காலாண்டு அடிப்படையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளபோதும், சிங்கப்பூரின் வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு உலகச் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக வந்ததாக, 42 நாடுகளிலிருந்து 41,700க்கும் அதிகமான முதலாளிகள் கலந்துகொண்ட ‘மேன்பவர் குரூப்’ கருத்தாய்வின் முடிவுகள் காட்டின.

குறிப்புச் சொற்கள்