வெளிநாட்டு ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் உட்பட, ஏறத்தாழ ஐந்நூறு பேர் கம்போங் கபூர் மெதடிஸ்ட் தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு ஆராதனையில் பங்கேற்றனர்.
‘மெத்தடிஸ்ட்’ எனும் பிரிவைப் பின்பற்றும் ‘புராட்டஸ்டன்ட்’ கிறிஸ்தவர்கள் வழிபடும் இந்த தேவாலயத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழில் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
சுறுசுறுப்பாக இயங்கும் வட்டாரத்தில், பழைமை குறையாமல் கம்பீரமாக நிற்கும் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு கொண்ட இந்த தேவாலயத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 25) நண்பகல் 12 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11.45 மணியிலிருந்தே திரண்ட பக்தர்களுக்கு ‘கேக்’, குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சிறு தொடக்கப் பிரார்த்தனை, ‘கேரல்’ பாடல்களுடன் கூட்டம் நடந்தேறியது. இதனை பாஸ்டர் ரெவரெண்ட் அழகேசன் மோசஸ் வழிநடத்தினார்.
கடந்த எட்டாண்டுகளாக இங்குச் சேவை செய்துவரும் அவர், “குடும்பம், உறவுகளை விட்டு இங்கு வந்து, பல சிரமங்களைக் கடந்து பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆறுதலாகவும் நட்புறவாகவும் அமையும் நோக்கில் இந்தச் சிறப்புப் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டது,” என்றார்.
பல்லினம், பல சமயச் சிந்தனைகள் கொண்ட இச்சமூகத்தில் அனைவரது மனத்திலும் அன்பும் சமாதானமும் நிலவ இந்நன்னாளில் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
பங்கேற்பாளர் மனநிலை
சிங்கபூருக்கு வந்து ஒருமாத காலமே ஆன நிலையில், முதன்முறையாக இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார் ஊழியர் விமல் ஜான்சன், 20. “இங்குள்ள பல்வேறு தரப்பு மக்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியையும் அன்பையும் பறிமாறிக்கொள்ளும் நாள். எங்கள் சபையில் வெளிநாட்டு ஊழியர்களை வரவேற்று உணவளிப்பதில் மகிழ்சி,” என்றார் இச்சபையில் ‘லே லீடர்’ பொறுப்பில் பணியாற்றும் ஆல்பர்ட்.
கடந்த ஓராண்டாகச் சிங்கப்பூரில் ஓட்டுநர் பணியாற்றும் தேவேந்திரன் அபினாஷ் ஜேக்கப், 28, “எங்கள் பணியில் ஆபத்துகள் அதிகம். நானும் என்னைப் போன்ற ஊழியர்களும் எந்தவித விபத்துகள், சிரமங்களுக்கும் ஆளாகாமல் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது தொடர் வேண்டுதல்,” என்றார்.
கடந்த ஈராண்டுகளாக இச்சபையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார் விக்னேஷ் காட்சன். “புதிய மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் கொண்டாடுவதில் தயக்கம் இருந்தது. பழகிக்கொள்வேன் என நினைக்கிறேன். இது புது அனுபவம்,” என்றார்.
“இந்தச் சிறந்த தினத்தில் அனைவருக்கும் கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும். இன்னும் மேம்பட்ட முறையில் கடவுளிடம் அன்பு செலுத்துவது, பிறருக்கு உதவுவது, சேவையாற்றுவது உள்ளிட்ட நற்பண்புகளுடன் திகழவேண்டும் என வேண்டுகிறேன்,” என்றார் அவர்.
தொடர்ந்து இச்சபையில், பங்கேற்பாளர்களுக்கான பல நிகழ்ச்சிகளும், மதிய உணவுகக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சபையில் தமிழர்கள் மட்டுமன்றி, மியன்மார் நாட்டினர், பெரானக்கன் இனத்தினர் உட்படஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

