ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டார மின்னிலக்க பொருளியல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கின்றன.
இவ்வாண்டு நவம்பரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அது கையெழுத்தாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘சிஎன்ஏ’ இத்தகவலை வெளியிட்டது.
பிலிப்பீன்சின் மணிலா நகரில் மே 27 முதல் 29 வரை நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இரண்டாவது கூட்டத்தில் ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு (டிஇஎஃப்ஏ) உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததை சிங்கப்பூர் வரவேற்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (மே 31) தெரிவித்தது.
அது, மின்னிலக்கப் பொருளியலுக்கான ஆசியானின் முதல் பரந்த, வட்டார அளவிலான ஒப்பந்தமாகும். ஆசியான் நாடுகளிடையே மின்னிலக்கத் தொடர்பு, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது அதன் நோக்கமாகும்.
ஆசியான் ‘டிஇஎஃப்ஏ’, மின்னிலக்க யுகத்தின் சிக்கல்களை சீரான, வலுவான, மின்னிலக்க விதிகளின் பகிர்வு மூலம் கையாள உதவுகிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சு குறிப்பிட்டது.
“ஆசியானின் தற்போதைய மின்னிலக்கப் பொருளியல் கடப்பாடுகளைக் கொண்டு அது உருவாக்கப்பட்டுள்ளது. மின்னிலக்க வர்த்தகம், எளிமையாக்கப்பட்ட மின்னிலக்க வர்த்தக நடைமுறைகள், நம்பிக்கையான எல்லை தாண்டிய தரவுப் பகிர்வுக்கு ஆதரவளிப்பது, மின்னிலக்கவழி கட்டணம் செலுத்தும் முறைகளை மேம்படுத்துதல், மின்னிலக்கப் பரிவர்த்தனைகள், இணைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், இவ்வட்டாரம் முழுவதும் மின்னிலக்க செயல்திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு பொதுவான விதிகளையும் கட்டமைப்பையும் உருவாக்க ஒப்பந்தம் வகை செய்கிறது,” என்று அமைச்சு விளக்கியது.
இதனால், தென்கிழக்கு ஆசியாவில் மின்னிலக்கப் பொருளியலுக்கான வாய்ப்புகளை குறிப்பாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கண்டறிவதை ஒப்பந்தம் எளிமையாக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கையோடு பரிவர்த்தனைகளைச் செய்ய அது உதவும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, நிதி சார்ந்த தொழில்நுட்பம் ஆகியவற்றையும் அது உள்ளடக்கியிருக்கும்.
“உயர்தரமான, வர்த்தகரீதியிலான அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு சிங்கப்பூர் முக்கியப் பங்காற்றியிருக்கிறது,” என்று அமைச்சு சுட்டிக்காட்டியது.
இந்நேரத்தில் ‘டிஇஎஃப்ஏ’ பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமையேற்ற தாய்லாந்துக்கும் இதர உறுப்பு நாடுகளுக்கும் ஆசியான் செயலகத்துக்கும் வர்த்தகப் பங்காளிகளின் பங்குக்கும் சிங்கப்பூர் நன்றி தெரிவித்துக்கொண்டது.
நவம்பரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

