சிங்கப்பூரைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் இருந்து பல நூற்றாண்டு பழமைவாய்ந்த கப்பல் சிதைவுகளிலிருந்து எடுக்கப்பட்ட கலைப்பொருள்கள், புதுப்பிக்கப்பட்ட சிங்கப்பூர் கடல்துறைக் காட்சிக்கூடத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.
காட்சிக்கூடத்தை 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) திறந்து வைத்ததை அடுத்து கடந்த மார்ச் 17ஆம் தேதி (திங்கட்கிழமை) மரினா சவுத் பியரில் புதுப்பிக்கப்பட்ட காட்சிக்கூடத்தைப் போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை திறந்துவைத்தார்.
புதுப்பொலிவு பெற்றுள்ள காட்சிக்கூடத்தில் புதிய மரபுடைமைப் பகுதி ஒன்று உள்ளது. சிங்கப்பூரின் கடல்துறை வரலாற்றில் இடம்பெற்ற முக்கிய தருணங்கள் அப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் சீனப் பயணிகள் சிங்கப்பூரை ஓர் உத்திபூர்வ வர்த்தக மையமாகப் பயன்படுத்தியதைக் கூறும் முதல் எழுத்துபூர்வ பதிவுகளும் இதில் அடங்கும் என்று குறிப்பிட்டார் திரு முரளி.
‘டைட்ஸ் ஆஃப் டைம்’ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒருசில பொருள்கள் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. இந்தக் கண்காட்சிக்கான பணிகள் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தன.
தேசிய மரபுடைமை வாரியம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கலைப்பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எம்பிஏ தெரிவித்தது.
காட்சிக்கூடம் அதிகாரத்துவமாக மீண்டும் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் பேசிய திரு முரளி, ஒரு காலனித்துவ துறைமுகமாக இருந்து அனைத்துலக மையத் துறைமுகமாக சிங்கப்பூர் வளர்ச்சி கண்டதைக் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் முதல் கொள்கலன் முனையமான தஞ்சோங் பகார் முனையம், 2040களில் உலகிலேயே ஆகப் பெரிய முழுத் தானியங்கி கொள்கலன் துறைமுகமாக விளங்கவிருக்கும் துவாஸ் துறைமுகம் ஆகியவற்றையும் அவர் சுட்டினார்.
சிங்கப்பூரின் கடல்துறை வரலாற்றுச் சுவட்டைப் புரட்டிப் பார்ப்பதுடன், காட்சிக்கூடம் எதிர்காலத்தையும் அதன் ஒரு பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களைக் கடல்துறைப் பிரிவு ஏற்றுள்ளதோடு மின்னிலக்க, இருவழித்தொடர்புடைய கலைப்பொருள்களும் அப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.