‘எச்ஐவி’ எனப்படும் மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலைப் பாதிக்கும் கிருமித்தொற்றுக்கான சுயபரிசோதனைக் கருவிகள், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியிலிருந்து சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும்.
குறிப்பிட்ட சில கார்டியன், வாட்சன் மருந்தகங்களில் ‘ஓராகுவிக் எச்ஐவி’ சுயபரிசோதனைக் கருவியை வாங்க இயலும்.
ரத்தத்தில் நோய்க்கிருமிகளை அழிக்கவல்ல புரதங்களைக் (antibodies) கண்டறிவதற்காக, வாயில் திரவ மாதிரியைச் சேகரிக்கும் சாதனம் அந்த சுயபரிசோதனைக் கருவியில் இருக்கும். ஏறத்தாழ 20 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.
சமூகத்தில் ‘எச்ஐவி’ பரிசோதனைக்கான வசதி மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையிலும் வழக்கமான இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் சுகாதார அமைச்சு முயற்சிகளை மேற்கொள்கிறது. அந்த முயற்சிகளின் ஓர் அங்கமாக சுயபரிசோதனைக் கருவியின் விற்பனை அமைகிறது என்று சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நவம்பர் 30ஆம் தேதி கூறினார்.
14வது முறையாக நடைபெறும் சிங்கப்பூர் ‘எய்ட்ஸ்’ கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
சிங்கப்பூரில் ‘எய்ட்ஸ்’ நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கான அரசு சாரா அமைப்பு (AfA Singapore) அந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
‘எச்ஐவி’ சுயபரிசோதனைக் கருவியை அறிமுகம் செய்யும் முன்னோடித் திட்டம் 2022ஆம் ஆண்டு தொடங்கியதாகக் கூறிய டாக்டர் ஜனில், “சுயபரிசோதனை பாதுகாப்பானது, செயல்திறனுடையது, பொதுமக்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என்பது அதில் தெரியவந்தது,” என்று கூறினார்.
‘ஓராகுவிக் எச்ஐவி’ சுயபரிசோதனைக் கருவியை, தேசிய தோல் நோய் சிகிச்சை நிலைய மருந்தகத்தின் இணையத்தளத்திலும் வாங்கலாம். அதன் விலை $21.85.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூர்வாசிகளிடையே புதிதாக 209 பேருக்கு ‘எச்ஐவி’ கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. 2023ஆம் ஆண்டின் இறுதி வரை சிங்கப்பூர்வாசிகளில் இந்தப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 9,540 ஆகும். அவர்களில் 2,457 பேர் மாண்டுவிட்டனர்.
டாக்டர் ஜனில் தமது உரையில், “இந்நோய் தொடர்பில் எட்டவேண்டிய இலக்கை ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டு நடவடிக்கைத் திட்டம் (UNAIDS) நிர்ணயித்துள்ளது. 95-95-95 எனப்படும் அதன்கீழ், ‘எச்ஐவி’யால் பாதிக்கப்பட்ட 95 விழுக்காட்டினருக்கு அதுகுறித்துத் தெரிந்திருக்க வேண்டும்; அவ்வாறு அறிந்துகொண்டோரில் 95 விழுக்காட்டினர் அதற்கான சிகிச்சை பெறவேண்டும்; அத்தகைய சிகிச்சை பெறுவோரில் 95 விழுக்காட்டினருக்கு 2030ஆம் ஆண்டுக்குள் உடலில் கிருமியின் அளவு வெகுவாகக் குறைய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் இதன் தொடர்பில் முன்னேற்றம் அடைந்து வருவதாக அவர் கூறினார்.
இங்கு, ‘எச்ஐவி’யால் பாதிக்கப்பட்ட 85 விழுக்காட்டினருக்கு அதுகுறித்துத் தெரிந்துள்ளது. அவர்களில் 94 விழுக்காட்டினர் அதற்கான சிகிச்சை பெறுகிறார்கள். சிகிச்சை பெறுவோரில் 93 விழுக்காட்டினருக்கு உடலில் அக்கிருமியின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.