ஜப்பானின் ஹொக்காய்டோ பகுதியில் வாடகை காரை ஓட்டிக்கொண்டிருந்தார் திரு கார்த்திக் பாலசுப்பிரமணியன், 44. அவருடைய மனைவியும் இரு மகள்களும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த லாரியும் அந்த காரும் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
திரு கார்த்திக் மயக்கநிலைக்குச் செல்வதற்குமுன் அவருக்குக் கடைசியாக கேட்டது அவரின் மனைவி 41 வயது லின் ஸியுயுவேயின் ஓலம்தான்.
ஜனவரி 10ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் திருவாட்டி லின்னும் அவருடைய நான்கு மாதக் குழந்தை ஆஹனாவும் உயிர்பிழைக்கவில்லை.
ஜூரோங் வெஸ்ட்டில் தம்முடைய மனைவி, மகளின் துக்கழிப்புச் சடங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 19) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு கார்த்திக், விபத்து நிகழ்வதற்கு சற்று முன்பு தம்முடைய மனைவி கத்திய சத்தம் இன்னும் தமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.
விபத்து நிகழ்வதற்கு முந்திய தருணங்களை நினைவுகூர்ந்த திரு கார்த்திக், தாம் சென்றுகொண்டிருந்த பகுதியில் பனி சூழ்ந்திருந்ததால், எதிரே சாலைச் சந்திப்பு இருந்தது சரியாகத் தென்படவில்லை என்றார். மேலும், 'ஜிபிஎஸ்' வரைபடத்தில் அந்தச் சாலைச் சந்திப்பே காட்டப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
"சாலை மேலேயும் கீழேயுமாக சென்றது. இரு பக்கங்களிலும் பனி சூழ்ந்திருந்ததால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே, சாலையைப் பின்தொடர்ந்து காரை ஓட்டினேன்.
"கடைசி நேரத்தில், அதாவது 150 மீட்டர் தொலைவில் 'stop' அறிவிப்புப் பலகையை நான் பார்த்தேன். உடனடியாக 'பிரேக்'க்கை அழுத்தினேன். ஆனால், உரிய நேரத்தில் காரை நிறுத்த முடியாமல் போய்விட்டது.
"காரில் என் மனைவி கத்தியதை மட்டும் என்னால் கேட்க முடிந்தது. என்னால் அதை இன்னமும் கேட்க முட்கிறது. அதற்குப் பிறகு ஒரு சில நிமிடங்களுக்குள் நான் சுயநினைவை இழந்துவிட்டேன்," என்றார் திரு கார்த்திக்.
தாம் விபத்தில் சிக்கிக்கொண்டதை திரு கார்த்திக்கின் திறன் கைக்கடிகாரம் அவருக்குத் தெரியப்படுத்தியது. தம் மனைவி, பிள்ளைகளுக்கு உதவ காரிலிருந்து அவர் வெளியேறினார்.
அங்கிருந்த மற்ற ஓட்டுநர்கள் உதவ முன்வந்தனர். திருவாட்டி லின், திரு கார்த்திக்கின் மடியில் கிடத்தப்பட்டார்.
திரு கார்த்திக்கும் அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவரும் திருவாட்டி லின்னுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்துசேர்ந்த அவசர மருத்துவ வாகனம், திருவாட்டி லின்னையும் குழந்தை ஆஹனாவையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.
அங்கு மருத்துவர்கள் திருவாட்டி லின்னின் இதயத்தை மீண்டும் செயல்படுத்த வைக்க போராடினர். ஆனால், அவர்களது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.
ஆஹனாவுக்கு உடல் ரீதியாக காயங்கள் ஏற்படவில்லை. என்றாலும், விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்று திரு கார்த்திக் கூறினார்.
திரு கார்த்திக்கின் மூன்று வயது மகள் ஆன்யாவுக்கு தலையில் தையல் போடப்பட்டது. திரு கார்த்திக்கிற்கு இடுப்பில் முறிவு ஏற்பட்டது.
அவருக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டன - ஒன்று, அறுவை சிகிச்சை செய்துகொள்வது. மற்றொன்று, வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு இயற்கையாகவே குணமடைவது. திரு கார்த்திக் இரண்டாவது தெரிவைத் தேர்ந்தெடுத்தார்.
"நான் கவனித்துக்கொள்ள எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனவே, என்னால் படுக்கையில் இருக்க முடியாது," என்றார் அவர்.
திரு கார்த்திக்கும் மகள் ஆன்யாவும் புதன்கிழமை (ஜனவரி 18) இரவு சிங்கப்பூர் திரும்பினர். திருவாட்டி லின், குழந்தை ஆஹனாவின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) இடம்பெறுகிறது
விபத்து நிகழ்வதற்கு முன்பு ஹொக்காய்டோவில் பயணம் திட்டமிட்டபடி சென்றுகொண்டிருந்ததாக திரு கார்த்திக் சொன்னார்.
விலங்கியல் தோட்டம் போன்ற இடங்களுக்கு அவர்கள் சென்றனர். ஆஹனா, பெற்றோருக்கு சிரமம் கொடுக்காத அமைதியான குழந்தை என்பதால், குழந்தையுடன் பயணம் செய்ய தாமும் மனைவியும் தன்னம்பிக்கையுடன் இருந்ததாக திரு கார்த்திக் கூறினார்.
குடும்பமாகச் சேர்ந்து ஜப்பானுக்குப் பயணம் செய்தது இவர்களுக்கு இதுவே முதன்முறை என்றாலும், மனைவியுடன் சேர்ந்து திரு கார்த்திக் அந்நாட்டிற்குப் பலமுறை சென்றுவந்துள்ளார். குறிப்பாக, ஹொக்காய்டோவிற்கு மட்டும் ஆறு முறை அத்தம்பதி சென்று வந்தனர். அவற்றில் இரு பயணங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.
2016ல் ஜப்பானுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்ட திரு கார்த்திக்கிற்கு அந்நாடு மிகவும் பிடித்துவிட்டது. சைவ உணவுகளை மட்டும் உண்ணும் திரு கார்த்திக் முதலில் தயங்கினார். ஜப்பானில் தமக்கான அதிக உணவு தெரிவுகள் இருக்காது என்று அவர் நினைத்தார்.
இந்தியாவிலிருந்து இங்கு வந்த திரு கார்த்திக், நண்பர் ஒருவர் மூலம் 2006ல் திருவாட்டி லின்னை முதன்முதலில் சந்தித்தார். 2007ல் காதலிக்கத் தொடங்கிய அவர்கள், 2014ல் மணம் முடித்தனர்.
"சிங்கப்பூரில் இருப்பதைப்போல இந்தியாவில் கிடையாது. இந்தியாவில் அவ்வளவாக கலப்பினத் திருமணங்கள் நடைபெறுவதில்லை. என்றாலும், சியுயுவேவை நான் திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் முழுச் சம்மதம் தெரிவித்தனர். ஏனெனில், அவர் அவ்வளவு நல்ல மனிதர்," என்றார் திரு கார்த்திக்.
விபத்துக்குப் பிறகு திரு கார்த்திக்கிற்கு உதவ அவருடைய சகோதரி இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளார். திரு கார்த்திக்கின் தாயார் அடுத்த மாதம் இங்கு வரவுள்ளார்.
தம்முடைய மனைவியின் குடும்பத்தாரும் நண்பர்களும் ஆதரவாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு கார்த்திக், மகள் ஆன்யாவை வளர்ப்பதில் தமக்குச் சிரமங்கள் இருக்காது என தாம் நம்புவதாகச் சொன்னார்.
"அவர்கள் எனக்குப் பேராதரவாக உள்ளனர். வாழ்க்கையைத் தொடர எனக்கு ஊக்கமளித்து வருகின்றனர்," என்றார் அவர்.

