ஆண்டு இறுதி விடுமுறைக் காலம் நெருங்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் மலேசியாவுக்குச் செல்ல விரும்புவோர், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆண்டு இறுதியில் சிங்கப்பூர்-மலேசிய எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
மேலும் இரண்டு சோதனைச் சாவடிகளிலும் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளுக்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். இதனால் குடிநுழைவுச் சோதனைகளை முடிப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படலாம் என்று சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) டிசம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆண்டு இறுதி பள்ளி விடுமுறையின் முதல் வாரத்தில் நவம்பர் 21 முதல் நவம்பர் 27 வரையில் 3.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுள்ளனர்.
நவம்பர் 21ஆம் தேதி மட்டும் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக 555,000 பயணிகள் சென்றனர்.
உச்ச நேரங்களில் காரில் பயணம் செய்தவர்கள், மலேசியாவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக குடிநுழைவுச் சோதனைகளை முடிக்க மூன்று மணி நேரம் வரை காத்திருந்தனர்.
இதனால் மலேசியாவுக்கான பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நிலவரங்களை அறிந்து செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன் மோட்டாரிங் இணையப்பக்கம், புக்கிட் தீமா விரைவுச் சாலை, ஆயர் ராஜா விரைவுச் சாலையில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள், ஐசிஏயின் ஃபேஸ்புக், எக்ஸ் ஊடகத்தளம், எஸ்பிஎச் மற்றும் மீடியாகார்ப் வானொலி ஆகியவற்றின் வழியாகப் போக்குவரத்து நிலவரங்களை அறியலாம்.
தொடர்புடைய செய்திகள்
உச்ச நேரங்களில் பயணம் செய்யவேண்டிய அவசியமிருந்தால் நெரிசலைத் தவிர்க்க எல்லைகளுக்கு இடையிலான பேருந்துச் சேவைகளை பயன்படுத்துவதைப் பரிசீலிக்கலாம் என்று ஐசிஏ மேலும் கூறியது.
பயணிகள், MyICA கைப்பேசி செயலி வழியாக கியூஆர் குறியீட்டை உருவாக்கி பயன்படுத்தவும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.

