தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாலந்து-புக்கிட் தீமா, புக்கிட் பாஞ்சாங் மசெக வேட்பாளர்கள் அறிவிப்பு

3 mins read
0bfcd902-632e-4442-961f-0c31b1695343
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் அறிவிக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் (இடமிருந்து) கிறிஸ்டஃபர் டி’சூசா, சிம் ஆன், டாக்டர் விவியன் பாலகிரு‌ஷ்ணன், எட்வர்ட் சியா (வலம்). புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி வேட்பாளராக திரு லியாங் எங் ஹுவா (வலமிருந்து இரண்டாவது) அறிவிக்கப்பட்டார். - படம்: ரவி சிங்காரம்

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியிலும் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி களமிறக்கவுள்ள வேட்பாளர்களில் எந்த மாற்றமும் இல்லை.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த துணையமைச்சர் சிம் ஆன், திரு எட்வர்ட் சியா, திரு கிறிஸ்டஃபர் டி’சூசா ஆகியோர் ஹாலண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிடுவர்.

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் திரு லியாங் எங் ஹுவா போட்டியிடுவார். திரு லியாங் எதிர்வரும் தேர்தலில் வெற்றிப்பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஐந்தாம் தவணை காலத்துக்கு நீடிப்பார்.

2006ல் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் எதிர்க்கட்சியுடன் போட்டியின்றி வெற்றிப்பெற்ற மக்கள் செயல் கட்சி அணி உறுப்பினர்களில் திரு லியாங்கும் ஒருவர். அந்த ஆண்டுதான் அவர் அரசியலிலும் கால் பதித்தார்.

பின் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதிக்கு மாற்றப்பட்டு அதையும் திரு லியாங் கைப்பற்றினார்.

தொடக்கக் கட்டத்தில் கண்டறியப்பட்ட மூக்குப் புற்றுநோயால் 2023 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை சிகிச்சைக்காகத் திரு லியாங் பணியிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்தார். சிகிச்சைக்குப் பின் புற்றுநோயிலிருந்து அவர் குணமடைந்தார்.

அதைத் தொடர்ந்து வாழ்க்கைமுறையை மாற்றியதாக சொன்ன திரு லியாங், “சென்ற ஆண்டிறுதியில் நடந்த மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டு வழக்கமான சோதனைகளில் நான் தொடர்ந்து நலமாக உள்ளேன் என்று தெரிகிறது,” என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் புக்கிட் பாஞ்சாங்கில் மேற்கொள்ளப்பட்ட சில மேம்பாட்டு பணிகளையும் திரு லியாங் சுட்டினார்.

புதிய பலதுறை மருந்தகம், இரண்டாம் உணவங்காடி நிலையம், கிராஞ்சி விரைவுச்சாலைக்கான செஞ்ஜா இணைப்புச்சாலை, மிதிவண்டிப் பாதைகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

“150க்கும் மேற்பட்ட நகர மேம்பாட்டுத் திட்டங்கள், 147 புளோக்குகளுக்கு இல்ல மேம்பாட்டுத் திட்டங்கள் முடித்துள்ளோம். எட்டு புளோக்குகளுக்கும் மின்தூக்கிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன,” என்றார் திரு லியாங்.

“புக்கிட் பாஞ்சாங்கில் திரையரங்கு இல்லையெனப் பலரும் கூறியுள்ளனர். அதனால் புதிய செங்ஹுவா சமூக மன்றத்தில் சமூகத் திரையரங்கு ஒன்றை அமைக்கவிருக்கிறோம். பூங்கா இணைப்புப் பாதைகளையும் விரிவாக்குவோம்,” என்றார் திரு சியா.

திருவாட்டி சிம் ஆன், புதிதாக வரவுள்ள புக்கிட் தீமா ஒருங்கிணைந்த கட்டமைப்புப் பற்றிப் பேசினார்.

ஏப்ரல் 5ஆம் தேதி ஹாலந்து-புக்கிட் தீமா நகர மன்றம் அறிவித்த ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தில் புதிய தாதிமை இல்லம், துடிப்பான மூப்படைதல் நிலையங்கள், புக்கிட் பாஞ்சாங் ‘வட்டாரம் 5’ பூங்கா, சிகிச்சைக்கான தோட்டங்கள் போன்றவை இடம்பெற்றன.

“பல மாற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பொதுத் தேர்தல் நடக்கிறது. நிலையற்ற உலகச் சூழலில் வர்த்தகத்தை நம்பியுள்ள சிறு நாடான சிங்கப்பூர் பாதிப்படையும். உள்நாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் வழிநடத்தும் புதிய தலைமைத்துவக் குழு பொறுப்பேற்றுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிகளும் நம் வாழ்வாதாரத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும்,” என உறுதியான தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார் டாக்டர் பாலகிரு‌ஷ்ணன்.

“சிங்கப்பூர் ஒரு சிறிய, பலதரப்பட்ட, திறந்த சமூகம். எனவே மாறுபட்ட கருத்துகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. அத்தகைய மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும்போது மரியாதையுடன் செய்யவேண்டும். விவாதங்களும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். உள்நாட்டில் ஒன்றுபடாவிட்டால் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாள முடியாது,” என்று டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் வலியுறுத்தினார்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சிக் குறித்து, “திரு ரவி ஃபிலமன் ஒரு நல்ல மனிதர். தனது மாறுபட்ட கருத்துகளை அவர் பகிர்வது முற்றிலும் நியாயமானதே,” என்றார் டாக்டர் விவியன்.

சிங்கப்பூரின் ஆகப் பெரியத் தனித்தொகுதியான புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் சென்ற பொதுத் தேர்தலில் கடுமையான போட்டி இருந்தது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் பால் தம்பையா அப்போது 46.26% வாக்குகளைப் பெற்றார். திரு லியாங் 53.74% வாக்குகளைப் பெற்று வென்றார். இவ்வாண்டு மீண்டும் டாக்டர் பால் தம்பையா போட்டியிடவுள்ளதாகக் கூறியுள்ளார்.

சென்ற பொதுத் தேர்தலில் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.36% வாக்குகளைப் பெற்று வென்றது.

அப்போது எதிர்க்கட்சியாக நின்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இம்முறை அங்கு நிற்கிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி அங்கு நிற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, மூன்று உத்தேச வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்