எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியில் போட்டியிடும் தனது நால்வர் அணியை ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்குழுவில் 25 வயது சரத் குமாரும் ஒருவர்.
தேர்தலில் போட்டியிடும் ஆக இளைய வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு பேர் கொண்ட குழுவில் சரத் குமாருடன் நிதி ஆலோசகரான 43 வயது ஃபஸ்லி தலிப், வர்த்தகரான 70 வயது பேட்ரிக் டான், 57 வயது செயற்பாட்டு மேலாளர் நிஸார் சுபைர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் திரு சரத், திரு நிஸார், திரு டான் ஆகிய மூவரும் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
திரு ஃபஸ்லி, 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நால்வர் கொண்ட குழுவை ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமோன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) கிம் மோ சந்தை, உணவு நிலையம் அருகில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டை ஒன்றில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்றும் அனைவரும் சமமான முறையில் மதிக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி வலியுறுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதை ஒட்டியே அதன் தேர்தல் முழக்க வரி அமைந்துள்ளது.
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியில் 122,891 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் பலர் தரைவீடுகளிலும் கூட்டுரிமை வீடுகளிலும் வசிப்பவர்கள்.
மனநலம், பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்கள் குறித்து தாம் அக்கறை கொள்வதாக திரு சரத் குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.