கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) மாலை, ஹாலந்து ரோட்டில் நடந்த விபத்தில் தொடர்புடைய காரின் ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஆடவரின் வயது 25.
ஹாலந்து ரோட்டில் நடந்த விபத்து குறித்து வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
கார் ஒன்று சறுக்கிச் சென்றதில் விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது.
ஆடவரைக் கைது செய்ததுடன் மின்சிகரெட் ஒன்றையும் மூன்று ‘கேபோட்’களையும் பறிமுதல் செய்ததாகக் கூறிய காவல்துறை, மின்சிகரெட் தொடர்பான குற்றச்செயல் குறித்துச் சுகாதார அறிவியல் ஆணையத்திற்குத் தகவல் அளிக்கப்படும் என்று கூறியது.
வெள்ளிக்கிழமை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றபோது காவல்துறை கார்கள் நான்கும் அவசர மருத்துவ உதவி வாகனம் ஒன்றும் அங்குக் காணப்பட்டன.
சாலையோர நடைபாதையில் அமர்ந்திருந்த ஓர் ஆடவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதைக் காண முடிந்தது.
சம்பவத்தில், அவசர மருத்துவ உதவி வாகனத்தின் உதவி தேவைப்படவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

