தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தம்பி’ சஞ்சிகைக் கடையைக் கௌரவப்படுத்திய ஹாலந்து வில்லேஜ் எம்ஆர்டி நிலைய சுவர் ஓவியம்

3 mins read
7bb8f629-f4da-42cd-9c57-7b0fbe07ba5c
ஹாலந்து வில்லேஜ் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள 10 மீட்டர் சுவர் ஓவியத்தைத் தீட்டிய திரு ரோனி டானுடன் ‘தம்பி’ சஞ்சிகைக் கடையின் உரிமையாளர் திரு பெரியதம்பி செந்தில் முருகன். - படம்: சாவ்பாவ்

ஹாலந்து வில்லேஜ் எம்ஆர்டி நிலையத்தில் சுவர் ஓவியத்தைத் தீட்டும் பொறுப்பை உள்ளூர் ஓவியரான 71 வயது திரு ரோனி டானுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் வழங்கியது.

சுவர் ஓவியம் ஹாலந்து வில்லேஜ்ஜின் கலாசார மரபுடைமையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

திரு டான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புக்கிட் தீமா வட்டாரத்தில் வசித்தவர்.

ஹாலந்து வில்லேஜ்ஜில் உள்ள புகழ்பெற்ற இடங்களுக்குக் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரயிறுதியிலும் தமது மனைவி, மூன்று பிள்ளைகள் ஆகியோருடன் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சுவர் ஓவியம் வரையும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அந்த வட்டாரம் குறித்து ஆய்வு நடத்தவும் சுவர் ஓவியத்தில் இடம்பெறும் முக்கிய சின்னங்களைத் தேர்ந்தெடுக்கும் ஓவியம் தீட்டும் உத்திகளைத் தேர்வு செய்யவும் அவருக்கு ஐந்து மாதங்கள் தேவைப்பட்டன.

தற்போது அந்த சுவர் ஓவியம் ஹாலந்து வில்லேஜ்ஜுக்கு அழகு சேர்த்துள்ளது.

அவ்வழியாகச் செல்பவர்கள் ஹாலந்து வில்லேஜ்ஜின் கலாசார மரபுடைமையைப் படம்பிடித்துக் காட்டும் சுவர் ஓவியத்தைப் பார்த்து ரசிக்கின்றனர்.

பயணிகள் சேவை நிலையத்துக்குப் பக்கத்தில் அந்த பத்து மீட்டர் சுவர் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

சுவர் ஓவியத்தில் ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்துக்கே உரிய நான்கு முக்கிய சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த நான்கில் இரண்டு ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்தில் தற்போது இல்லை.

அவை ‘தம்பி’ சஞ்சிகைக் கடை மற்றும் ஹாலந்து வில்லேஜ் கடைத்தொகுதிக்கு மேல் இருந்த டச் காற்றாலை.

ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்தின் புகழ்பெற்ற சிப் பீ கார்டன்ஸ், லோராங் லிப்புட்டுக்கும் லோரோங் மம்போங்கிற்கும் இடையிலுள்ள சாலைச் சந்திப்பு ஆகிய இரண்டும் சுவர் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன.

வண்ண மையைப் பயன்படுத்தி சுவர் ஓவியத்தைத் திரு டான் தீட்டியுள்ளார்.

சுவர் ஓவியத்தைக் கல்வி அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சான் சுன் சிங் செப்டம்பர் 7ஆம் தேதியன்று திறந்துவைத்தார்.

ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்தின் புகழ்பெற்ற சின்னங்களில் ஒன்றான ‘தம்பி’ சஞ்சிகைக் கடை 1940களில் திரு பி. கோவிந்தசாமியால் நிறுவப்பட்டது.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கழித்து அது இவ்வாண்டு மே மாதம் 5ஆம் தேதியன்று மூடப்பட்டது.

திரு கோவிந்தசாமியின் பேரனான 49 வயது திரு பெரியதம்பி செந்தில் முருகன் ஹாலந்து சாலை கடைத்தொகுதியில் ‘தம்பி’ சஞ்சிகைக் கடையை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார்.

ஹாலந்து வில்லேஜ் வட்டாரத்திலேயே தமது கடை நான்கு முறை இடம் மாறியதாக அவர் கூறினார்.

கடைக்கு வெளியே இருந்த புத்தக அலமாரிகளை அகற்றிவிடும்படி கடையின் உரிமையாளர் கூறியதை அடுத்து, கடையை மூட முடிவெடுத்ததாக திரு செந்தில் முருகன் தெரிவித்தார்.

கடைக்கு வெளியே இருந்த புத்தக அலமாரிகளை அகற்றிவிட்டு கடைக்கு உள்ளே அவற்றை வைத்தால் கடையின் தனித்துவம் இல்லாமல் போய்விடும் என்றும் அதன் பாரம்பரியம் மறைந்துவிடும் என்றும் தாம் கருதியதாக அவர் கூறினார்.

கடையை மீண்டும் திறக்கும் நோக்குடன் ஹாலந்து வில்லேஜ்ஜில் அவர் பொருத்தமான இடம் ஒன்றைத் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஹாலந்து வில்லேஜ் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள சுவர் ஓவியத்தை நேரில் கண்டு மகிழ்ந்தார் திரு செந்தில் முருகன்.

“சுவர் ஓவியத்தில் எங்களது கடை இடம்பெற்றிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் அந்தக் கடை தற்போது அங்கு இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. கடையை மூடி மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. மீண்டும் கடையைத் திறந்து வியாபாரம் செய்யாவிடில் மக்கள் மறந்துவிடுவார்கள். மீண்டும் கடையைத் திறக்க முயற்சி செய்து வருகிறேன்,” என்றார் திரு செந்தில் முருகன்.

குறிப்புச் சொற்கள்