சிங்கப்பூரில் துவங்கப்பட்ட மின்னணு நிறுவனமான ‘கிரியேட்டிவ் டெக்னாலஜி’, அதன் ஊழியரணியில் 14%, அதாவது ஏறத்தாழ 40 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை உறுதிசெய்த நிறுவனப் பேச்சாளர், “மாறிவரும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கிரியேட்டிவ் டெக்னாலஜி அதன் வர்த்தகத்தின் சில பிரிவுகளை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளது. இந்த உருமாற்றத்தின் ஒரு பகுதியாக, ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது,” என்றார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் அனைவருமே சிங்கப்பூரில் பணியாற்றுபவர்களா என்பது குறித்தும் உறுதிப்படுத்தப் பேச்சாளர் மறுத்துவிட்டார். நிறுவனத்தின் இணையத்தளத்தின்படி, அனைத்துலக அளவில் அதற்கு 280க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
இந்த எண்ணிக்கை, நிறுவனம் 2000களில் அதன் வளர்ச்சிக் காலகட்டத்தில் அமர்த்தி இருந்த மொத்த ஊழியர்களில் ஒரு பகுதி என்று அறியப்படுகிறது.
நிறுவனத்தை மாற்றியமைப்பதில் விற்பனைப் பிரிவு, விளம்பரப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.
“எங்கள் நிறுவனத்தின் இதயத்துடிப்பாக ஊழியர்கள் இருந்து வந்துள்ளதால் இந்த முடிவை அவ்வளவு எளிதில் நாங்கள் எடுக்கவில்லை. எங்கள் நிறுவனத்திடம் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, அவர்களது கடும் உழைப்பு ஆகியவற்றை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்,” என்றார் பேச்சாளர்.
மனிதவள அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் தகுந்த ஆதரவு அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, டிசம்பர் 31ஆம் தேதி 2024ஆம் ஆண்டோடு முடிவடைந்த நிறுவனத்தின் நிதி ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் நிகர இழப்பு அமெரிக்க டாலர் $6.1 மில்லியனாகப் (S$8.14 மில்லியன்) பதிவானது. அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக நிகர இழப்பு அமெரிக்க டாலர் $4.1 மில்லியனாக இருந்தது.

