ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் அமளியில் ஈடுபட்டு விமானப் பணியாளரைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) குற்றம் சாட்டப்பட்டது.
குடிபோதையில் விமானப் பணியாளரின் வலது மணிக்கட்டை இறுகப் பற்றியதாகவும் விமானத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதம் நடந்துகொண்டதாகவும் இந்தியாவைச் சேர்ந்த 42 வயது கொலத்து ஜேம்ஸ் லியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பிப்ரவரி 27ஆம் தேதியன்று அவர் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது குடிபோதையில் கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
காலை 11.59 மணிக்கும் பிற்பகல் 12.10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தமக்கு முன்னால் இருந்த இருக்கையை கொலத்து அடித்துத் தள்ளியதாக அறியப்படுகிறது.
விமான இருக்கையை சேதப்படுத்த அவர் முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரை அமைதிப்படுத்த விமானப் பணியாளர்கள் முயன்றபோது கொலத்து மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விமானப் பணியாளருக்கு எதிராக கொலத்து மாலை 5 மணி அளவில் மிரட்டல் விடுத்ததாக அறியப்படுகிறது.
விமானம் சாங்கி விமான நிலையத்தை அடைந்ததும் கொலத்துவை அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 22ஆம் தேதியன்று கொலத்து குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் பணியாளரைப் பலவந்தமாக இறுகப் பற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் மூன்று மாதச் சிறைத் தண்டனையுடன் $1,500 அபராதம் விதிக்கப்படலாம்.
கொலை மிரட்டல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
விமானத்தில் பயணம் செய்யும்போது குடிபோதையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் ஓராண்டு வரை சிறையும் $20,000 அபராதமும் விதிக்கப்படலாம்.