மூத்தோருக்கு இன்னும் கூடுதல் பராமரிப்பு வசதிகள், இளையர்களுக்கான வேலை வாய்ப்புகள், சிறப்புத் தேவையுள்ளோருக்கு வலுவான ஆதரவு, வசதி குறைந்தோருக்கு கூடுதல் அனுகூலங்கள்.
புதிதாக வரையறுக்கப்பட்ட ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதிக்கான இலக்குகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை.
ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி களமிறக்கும் ஐந்து உறுப்பினர்களில் திரு முரளி பிள்ளையும் ஒருவர்.
அவருடன் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, சுகாதார, தகவல் மின்னிலக்க மேம்பாட்டு துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், த மஜுரிட்டி (The Majurity) அறக்கட்டளையின் மனிதநேய இயக்குநர் டேவிட் ஹோ, ஹவ்காங் பிரிவின் முன்னாள் கிளைத் தலைவர் லீ ஹொங் சுவாங் ஆகியோர் அப்புதிய குழுத்தொகுதியில் மசெக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
“அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம்தான் எப்போதும் மக்களின் அக்கறைக்குரிய விவகாரமாக இருந்துள்ளது,” என்ற திரு முரளி, அதனைச் சரிவர கையாள நல்ல வேலைவாய்ப்பும் ஊதியமும் முக்கியம் என்றார்.
“அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் இளையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்ய முற்படுகிறோம்,” என்றார் அவர்.
ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூத்தோருக்கு எப்படி இன்னும் சிறப்பான பராமரிப்பை வழங்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருவதாகத் திரு முரளி குறிப்பிட்டார்.
மூத்தோர் பாதுகாப்புத் திட்டம், மூத்தோர் தடுமாறி விழுவதைத் தவிர்க்க உதவும் கட்டமைப்பு, செயின்ட் லியூக்ஸ் மருத்துவமனை, துடிப்புடன் மூப்படைதலை ஆதரிக்கும் ஃபெய் யுவே நிலையம் ஆகியவற்றில் பராமரிப்பு வசதிகள், இலவச பாரம்பரியச் சீன மருந்தகங்கள் என ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட சில மூத்தோருக்கான திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இளம் தலைமுறையினர், குறிப்பாக இளம் குடும்பங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியுள்ளது. தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளில் வசிக்கும் அத்தகையோரின் வாழ்க்கையை மேம்படுத்தவும் திட்டங்கள் வைத்திருக்கிறோம்,” என்ற திரு முரளி, கல்வியை முடித்தோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உதவுவோம் என்றும் சொன்னார்.
உலக நடப்புகளால் கூடி வரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க வசதி குறைந்தோருக்கான அனுகூலங்களையும் சலுகைகளையும் இன்னும் அதிகரிக்க முற்படுவதாக அவர் கூறினார்.
சமூக அளவில் $3 மில்லியன் நிதி திரட்டி, வசதி குறைந்தோருக்கு இதற்குமுன் உதவியதை அவர் சுட்டிக்காட்டினார்.
“தற்போது வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்த 400 குடியிருப்பாளர்கள் மாதந்தோறும் $100 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெறுகின்றனர். அதை $120 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் அவர்.
“புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள எவரும் உணவு கிடைக்காமல் தவிக்கக்கூடாது,” என்ற திரு முரளி, வட்டாரத்தின் வெவ்வேறு இடங்களில் சுடச்சுட உணவு விநியோகிக்கும் இயந்திரங்களை நிறுவ முயல்வதாகவும் கூறினார்.
ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி தனது அணியை அறிவித்துள்ளதை அடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
“அரசியலில் நேர்மை, உண்மை, ஒருவரின் குணம் ஆகியவை மிக முக்கியம். யாராக இருப்பினும் இந்த அம்சங்களில் சிறந்து விளங்கவேண்டும்,” என்ற திரு முரளி, இதற்குமுன் குழுத்தொகுதியில் சேவையாற்றிய கட்சியின் முன்னோடிகள் விட்டுச்சென்ற அடிச்சுவடுகளைத்தான் தாமும் பின்பற்றுவதாகச் சொன்னார்.
அந்த வகையில் மக்கள் செயல் கட்சியின் அணி, குறிப்பாக, புதுமுகம் திரு டேவிட் ஹோ சிறந்த எடுத்துக்காட்டு என்று திரு முரளி குறிப்பிட்டார்.
“தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவராக தமது வாழ்க்கையைத் தொடங்கிய திரு ஹோ, ஒரு பட்டதாரியாக இன்று அறக்கட்டளையில் சேவையாற்றுகிறார். வாழ்க்கையில் தமக்குக் கிடைத்த வாய்ப்புகள் மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று முனைப்புடன் அவர் இருக்கிறார். அவர் புதுமுகமாக வருவது எங்கள் அணிக்கு ஒரு பக்கபலம்,” என்றார் திரு முரளி.
திருவாட்டி ஃபூ, திருவாட்டி ரஹாயு ஆகியோரிடமும் கொட்டிக்கிடக்கும் பல அனுபவங்கள் நிச்சயமாக மக்களுக்குச் சேவையாற்ற கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியுடன் நம்புவதாகத் திரு முரளி கூறினார்.
வழக்கறிஞராக இருந்த திரு முரளி, 2001ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியில் இணைந்தார். கட்சியின் புக்கிட் பாத்தோக் கிளையில் 2007ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை செயலாளராகச் சேவையாற்றிய அவர், பின் 2012ஆம் ஆண்டு கட்சியின் பாய லேபார் கிளையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2015ஆம் ஆண்டு அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் அணியில் திரு முரளி இடம்பெற்றிருந்தார். அத்தேர்தலில் பாட்டாளிக் கட்சி 50.95 விழுக்காட்டு வாக்குகளுடன் அத்தொகுதியில் வெற்றிபெற்றது.
அதையடுத்து, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்கான அப்போதைய உறுப்பினர் திரு டேவிட் ஒங் பதவி விலகியதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் திரு முரளி அங்கு களமிறக்கப்பட்டார்.
எடுத்த எடுப்பிலேயே அவர் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் திரு சீ சூன் ஜுவானைப் பின்னுக்குத் தள்ளி 61.21 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.
2018ஆம் ஆண்டு உள்துறை, சட்ட அமைச்சின் அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட திரு முரளி, கடந்த ஆண்டு ஜூலை முதல் தேதியன்று சட்ட, போக்குவரத்து துணையமைச்சராகப் பதவியேற்றார்.