ஹாங்காங்கின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேதன் லாவை சிங்கப்பூருக்குள் நுழைவதிலிருந்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தேசியப் பாதுகாப்புக் குற்றங்களுக்காக ஹாங்காங் அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அவரை, நாட்டுக்குள் அனுமதிப்பது சிங்கப்பூரின் நலனுக்கு உகந்ததல்ல என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்குள் வர திரு லாவுக்கு விசா வழங்கப்பட்டுள்ளபோதும் அவரிடம் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
இம்மாதம் 27ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து சாங்கி விமான நிலையத்துக்கு வந்த திரு லாவிடம் விசாரணையும் பாதுகாப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து நாட்டுக்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்ட திரு லா அடுத்த விமானத்திலேயே சான் ஃபிரன்சிஸ்கோவிற்கு அடுத்த நாளே அதாவது 28ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்டார்.
ஹாங்காங்கின் அரசியல் ஆர்வலரான திரு லா, 2020ஆம் ஆண்டு ஹாங்காங்கிலிருந்து தப்பி ஓடியதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஹாங்காங் காவல்துறை அவருக்குக் கைதாணை பிறப்பித்ததையும் அமைச்சு சுட்டியது.
இருப்பினும், சிங்கப்பூருக்குப் புறப்படும்முன் ஒரு முறைக்கு மட்டுமே குறுகியகால விசாவைப் பெற்றதாகக் கூறிய திரு லா, சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பிற பயணிகளைப் போலவே குடிநுழைவு நடைமுறைகளை மேற்கொண்டதாகச் சொன்னார்.
சிங்கப்பூரில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமக்கு ஏற்கெனவே விசா கிடைத்திருந்ததால் சிங்கப்பூருக்குள் நுழைய எந்தத் தடங்கலும் இருக்காது என்று நினைத்தாகத் திரு லா சொன்னார். ஆனால் குடிநுழைவுச் சோதனையைக் கடக்க முற்பட்ட அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அவ்வாறு நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்ற திரு லா, இடைப்பட்ட நேரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 14 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட திரு லா பின் விமானத்தில் சான் ஃபிரான்சிஸ்கோவிற்குத் திரும்பினார்.