சிங்கப்பூரில் பாதுகாவலர்களை வசைபாடிய ஹாங்காங் பள்ளி முதல்வர் பதவி விலகல்

சிங்கப்பூரில் பாதுகாவலர்களை வசைபாடிய ஹாங்காங் பள்ளி முதல்வர் பதவி விலகல்

1 mins read
47383dfd-3378-4ab0-b66e-24264a8a5713
சமூக ஊடகத்தில் வலம் வரும் காணொளியில், பேருந்துப் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருக்கும் ஆடவர், இரண்டு பெண் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. - காணொளிப் படங்கள்: திரெட்ஸ் சமூக ஊடகம்

சிங்கப்பூருக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, சாஃப்ரா ஜூரோங்கில் பாதுகாவலர்களை வசைபாடிய ஹாங்காங் பள்ளி முதல்வர் பணியிலிருந்து விலகியுள்ளார்.

ஹாங்காங்கின் சான் வூய் கமர்ஷியல் சொசைட்டி உயர்நிலைப்பள்ளி முதல்வரான திரு லீ சியுக் ஹிங், வியாழக்கிழமை (மே 28) தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்ததாக பள்ளி மேலாளர் எட்மண்ட் வோங் சுன் செக் கூறியதை மேற்கோள் காட்டி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டது.

இருப்பினும், பல்வேறு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதால், திரு லீயின் பதவி விலகலை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்துப் பள்ளியின் இயக்குநர் சபை கூடி முடிவெடுக்கும் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டது.

ஹாங்காங்கின் மற்றோர் ஊடகத்திற்குத் திரு லீ அளித்த பேட்டியில், “நான் மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நான் நிதானத்தோடும் கட்டுப்பாட்டோடும் நடந்துகொண்டிருக்க வேண்டும்,” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

அச்சமயத்தில் தாம் அவ்வாறு நடந்துகொள்ளத் தவறிவிட்டதாகவும் தமது செயலைப் பற்றி தாம் சிந்திக்கப் போவதாகவும் கூறிய திரு லீ, மாணவர்கள் யாரும் தமது செயலைப் பின்பற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முகத்தைச் சுளித்து கேலி செய்த தமது செயலுக்காக ஹாங்காங், சிங்கப்பூர் மக்களிடம் திரு லீ மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்