சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் பெருமையை மக்கள் தங்கள் செயல்களால் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார். திரு லீ குவான் யூ மறைந்த 10ஆம் ஆண்டு நிறைவு நாளில் பிரதமர் பேசினார்.
தூய்மையான, பசுமை நிறைந்த நவீன சிங்கப்பூர் திரு லீயின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்று என்று அவர் புகழாரம் சூட்டினார். அப்படி அவர் உருவாக்கிய சிங்கப்பூர் உலகெங்கிலும் பாராட்டப்படுவதுடன் மதிக்கப்படும் நாடாகவும் விளங்குவதாகஅவர் கூறினார்.
“தன்னுடன் ஒரு முன்னோடித் தலைமுறைக் குழுவை இணைத்துக்கொண்டு பல சவால்களைச் சமாளித்து தகுதி, பொருளியல் மீள்திறன் கொண்ட நாட்டை உருவாக்கி அது ஒற்றுமையுடன் விளங்க ஆழ்ந்த கடப்பாடு கொண்டு திரு லீ செயல்பட்டார்,” என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் கதை இன்னும் எழுதப்பட்டு வருகிறது. திரு லீ ஏற்படுத்தியுள்ள அடித்தளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிங்கப்பூரின் வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம்,” என்று திரு வோங் தமது பதிவில் கூறியுள்ளார்.
திரு லீ குவான் யூ சிங்கப்பூரின் பிரதமராக 1959ஆம் ஆண்டில் பதவியேற்றார். 31 ஆண்டுகள் பிரதமராக அரும்பணியாற்றிய அவர் 1990ல் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். 2011ல் ஓய்வுபெறும் வரை மூத்த அமைச்சராகவும் மதியுரை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அதற்குப் பிறகு அவர் ஜிஐசி எனப்படும் சிங்கப்பூரின் இறையாண்மை நிதியத்துக்கு ஆலோசகராகப் பொறுப்பு வகித்தார். திரு லீ தமது 91வது வயதில் 2015ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி மறைந்தார்.
“பத்தாண்டுகள் கழித்து, தற்போது பெய்து வரும் மழை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருண்ட வானத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் நாட்டின் நிறுவனப் பிரதமர் லீ குவான் யூவிற்கு பிரியாவிடை அளித்ததை நினைவு கூறுகிறது,” என்று திரு வோங் தமது பதிவில் தெரிவிக்கிறார்.
திரு லீ மறைந்த 10ஆம் ஆண்டு நிறைவை மூத்த அமைச்சரும் திரு லீ குவான் யூவின் மூத்த மகனுமான திரு லீ சியன் லூங்கும் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டுக்கு அவர் ஆற்றிய அனைத்துக்காகவும் சிங்கப்பூரர்கள் அவரை நினைவில் வைத்துள்ளனர். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் அவர் தந்தை, தாத்தா என்பதுடன் எங்கள் உலகமே அவர்தான். அவருடைய நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வாழ்ந்து அவருக்கு பெருமை சேர்ப்போமாக,” என சிங்கப்பூரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.