இரண்டு குதிரைகள் பாசிர் ரிஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) செல்வதைக் காணமுடிந்தது. அதன் காரணமாக, நண்பகல் நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சமூக ஊடகத்தில் பரவிவரும் காணொளி ஒன்றில், பாசிர் ரிஸ் டிரைவ் 3க்கு அருகில் உள்ள சாலையில் வெள்ளை நிற, பழுப்பு நிறக் குதிரைகள் செல்வதைக் காணமுடிந்தது.
ஒரு காணொளியில், பழுப்பு நிறக் குதிரை சாலையோரப் புல்லில் மேய்ந்துகொண்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
குதிரைகள் தப்பி ஓடிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவை மீண்டும் லாயத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகக் காவல்துறை கூறியது. அவை பாசிர் ரிஸ் பூங்காவில் உள்ள லாயத்திற்கு மீண்டும் வந்ததாக நம்பப்படுகிறது.
“பாதுகாப்பாகக் குதிரைகளைப் பிடிக்க, அதிகாரிகள் லாயத்தின் ஊழியர்களுடன் செயல்பட்டனர். அவை பின்னர் லாயத்தில் கொண்டுசேர்க்கப்பட்டன,” என்று காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்துள்ளதாகவும் விசாரணை நடத்தப்படுவதாகவும் விலங்குநல மருத்துவச் சேவைக் குழும இயக்குநர் ஜெசிகா குவோக் கூறினார்.
யாராவது குதிரையைக் கண்டால், அமைதியாக இருக்கவேண்டும். அதனை அணுகவோ துரத்தவோ கூடாது என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
அவர்கள் 24 மணி நேர விலங்கு நடவடிக்கை நிலையத்தை 1800-476-1600 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

