தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பசுமையைக் கொண்டாடும் தோட்டக்கலை விழா

2 mins read
a8e14989-08ab-415e-83ec-b3084afb1793
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களுடன் இடம்: ஹோர்ட் பார்க்கில் அழகுபடுத்தப்பட்டுள்ள தோட்டம். - படம்: லாவண்யா வீரராகவன்

தேசியப் பூங்காக் கழகம் சார்பில் நடைபெறும் சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘ஹோர்ட் ஃபெஸ்ட்’ எனும் தோட்டக்கலைத் திருவிழா நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 23 முதல் 31 வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் தோட்டக்கலை நிறுவல்கள், சுற்றுலாக்கள், செயல்விளக்கங்கள், பயிலரங்குகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

ஒன்றிணைந்த தோட்டக்கலை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் சமூகத் தோட்டக்கலைத் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்கீழ் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சமூகத் தோட்டக்கலை நடவடிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருநூறு குழுக்களுடன் தொடங்கிய இந்தத் திட்டம், 2,000க்கும் மேற்பட்ட குழுக்களாக விரிவடைந்துள்ளதாகத் தேசியப் பூங்காக் கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன் 20ஆம் ஆண்டை ஒட்டி ‘ஹோர்ட் பார்க்’கிலும் வருகையாளர்களுக்குப் புதிய அனுபவங்களை அளிக்கும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூகத் தோட்ட ஆர்வலர்களின் காய்கறிச் செடிகள்.
சமூகத் தோட்ட ஆர்வலர்களின் காய்கறிச் செடிகள். - படம்: லாவண்யா வீரராகவன்

தோட்டக்கலையில் ஈடுபட விரும்பும் தொடக்க நிலையில் உள்ளோர்க்கு, எளிதாக வளர்க்கும் வாய்ப்புள்ள செடிகள், அவற்றின் தோற்றம், பராமரிப்பு குறித்து அறிய உதவும் ‘தொடக்கநிலைக்கான தோட்டம்’ (Beginner Friendly Garden) அமைக்கப்பட்டுள்ளது.

அதில் சங்குப்பூ, மாசிப்பத்திரி (Mugwort) உள்ளிட்ட செடிகள் இடம்பெற்றுள்ளன.

தோட்டக்கலை அறிமுகம் எனும் பகுதியில் சிங்கப்பூரில் வளரும் சாத்தியமுள்ள புதிய வகை, வெளிநாட்டுத் தாவரங்கள் வளர்க்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் பண்புகள், சகிப்புத்தன்மை குறித்து அறியலாம்.

குறிப்பாக, ‘கார்பெட் பக்கில்வீட்’, ‘லிட்டில் புளூஸ்டெம்’, ‘ஃபெதர்ஃபால்ஸ் செட்ஜ் கிராஸ்’ ஆகிய தாவரங்களை அங்கு காணலாம்.

சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிறுவல்.
சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிறுவல். - படம்: லாவண்யா வீரராகவன்

அத்துடன், ‘நறுமணத் தோட்டம்’ எனும் வாசனை தரும் மலர்கள், தாவரங்களுடன் புதுவித அனுபவம் தரும் இத்தோட்டத்தில் ‘பட்டர்ஃப்ளை ஜிஞ்சர்’, ‘சமோவன் கார்டீனியா’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், உயர்கல்வி மாணவர்களின் தோட்டக்கலைப் படைப்புகள், வருகையாளர்களின் தாவரங்களில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வளிக்கும் ‘லிவிங் லேப்’ ஆகியவையும் ‘ஹோர்ட் பார்க்கில்’ அமைந்துள்ளன.

இந்த அனுபவங்களைத் தவிர, பல்வேறு நிகழ்ச்சிகள், 60 வணிகர்கள் பங்கேற்கும் சந்தையும் இடம்பெறவுள்ளது.

அவற்றில் குறிப்பிட்ட பயிலரங்குகளைத் தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் பூமலை, ஜூரோங் லேக் பூந்தோட்டம், ஃபோர்ட் கேனிங் பூங்கா, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா, சுவா சூ காங் பூங்கா, பொங்கோல் நீர்வழிப் பூங்கா ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்