அடுத்த இரண்டு வாரங்களில் காலையில் மழையையும் வெப்பமான இரவுகளையும் எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) தெரிவித்தது.
பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பம் 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்களில் வெப்பம் 34 டிகிரி செல்சியசையும் மிஞ்சிவிடும் என்று அது கணித்துள்ளது. சில இரவுகளில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக இருக்கும்.
பெரும்பாலான நாள்களில் காலை பின்னேரத்திலும் மதிய நேரத்திலும் தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். சில நாள்களில் விடிவதற்கு முன்பு இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்று வீசலாம்.
ஜூலை பிற்பாதியின் பெரும்பாலான நாள்களில் தீவின் பல பகுதிகளில் குறுகிய நேரம் இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என்று நிலையம் தெரிவித்தது.

