தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதவுகளை நிரந்தரமாக மூடுகிறது ஹோட்டல் மிரமார்; 108 ஊழியர்கள் வேலையிழப்பு

2 mins read
3096c742-4b82-42d8-8330-5d3098eeb0d5
344 அறைகளைக் கொண்ட ஹோட்டல் மிரமார் அக்டோபர் இறுதியில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் பழைய ஹோட்டல்களில் ஒன்றான  ஹோட்டல் மிரமார் தனது கதவுகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் இறுதியில் அந்த ஹோட்டல் மூடப்படும் என்று ஹோட்டல் நிர்வாகமும் உணவு, பானம் மற்றும் அவை தொடர்புடைய தொழிற்சங்கமும்  (FDAWU) இன்று (ஆகஸ்ட் 29) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

நீண்டகால வர்த்தக நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு, ஹோட்டலை மூடுவது என்னும் கடினமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் விரிவான ஆலோசனையும் கவனமான பரிசீலனையும் நடத்தப்பட்டதாகவும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

ஹோட்டல் மிரமார் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் 108 ஊழியர்களும் ஆட்குறைப்புக்கு ஆளாகிறார்கள்.

பாதிக்கப்படுவோருக்கு நியாயமான முறையில் உதவிகள் வழங்கப்படுவது பற்றி தொழிற்சங்கத்துடன் ஹோட்டல் கலந்துபேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஊழியர்களுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையிலும் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு இணங்கவும் நியாயமான ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஈராண்டுகளுக்குக் குறைவான ஊழியர்களுக்குக் கருணைத் தொகை வழங்குவது பற்றிய தொழிற்சங்கத்தின் ஆலோசனையை ஹோட்டல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

மறுவேலைத் திட்டத்தின்கீழ் பணியாற்றிய ஊழியர்களுக்கும் ஆட்குறைப்பு உதவித் தொகுப்பு கிடைக்கும் என்றும் நீண்டகாலம் பணியாற்றிய ஊழியர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

அது குறித்து ஹோட்டல் மிராமர் நிர்வாக இயக்குநர் கென் லிம் கூறுகையில், “நீண்டகாலச் சேவையில் ஈடுபட்ட சக ஊழியர்களுக்கு சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களில் பலர் பல்லாண்டு காலம் இந்த ஹோட்டலில் வேலை செய்தவர்கள். அவர்களில் ஒருசிலர் 55 ஆண்டுகாலம் பணிபுரிந்தவர்கள்,” என்றார்.

பாதிக்கப்படும் ஊழியர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க ஹோட்டல் நிர்வாகத்துடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக தொழிற்சங்கம் கூறியது.

344 அறைகளைக் கொண்ட ஹோட்டல் மிராமர், 1971ஆம் ஆண்டு ஹேவ்லாக் ரோட்டில் திறக்கப்பட்டது. நகரின் வெளிப்புற வட்டாரத்தில் 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் ஹோட்டல்கள் அதிகமாக உருவானபோது இந்த ஹோட்டலும் உதயமானது.

குறிப்புச் சொற்கள்