கொரோனா கிருமித்தொற்று: ஹோட்டல்களின் வருமானம் பாதிப்பு

கொரோனா கிருமித்தொற்று: ஹோட்டல்களின் வருமானம் பாதிப்பு

2 mins read
d15d5e7a-27f1-4823-8ee8-b3a6a2cffcf9
கொரோனா கிருமித்தொற்று சிங்கப்பூருக்கு பரவியதிலிருந்து விலேச் ஹோட்டல் செந்தோசாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை பாதிப்பாகியுள்ளது. படம்: திமத்தி டேவிட் -

கொரோனா கிருமித்தொற்றால் உள்ளூரில் இயங்கும் ஹோட்டல்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்த ஹோட்டல்களில் தங்கயிருந்த வெளிநாட்டுப் பயணிகள் தங்களது பயணத்தை ரத்துசெய்துள்ளனர்.

அறைகளை சுத்தம் செய்ய ஹோட்டல்களுக்கு கூடுதல் செலவும் வந்துள்ளது.

'ஃப்பார் ஈஸ்ட் ஹாஸ்பிதேலட்டி' நிர்வாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆர்த்தர் கியோங், ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து அவரது நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹோட்டல்களில் தங்கயிருந்த வெளிநாட்டு பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

அவரது நிறுவனத்தின் கீழ் இயங்கும் 'ஒயேசிஸ்' ஹோட்டலில் தங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

நீண்ட காலத்திற்கு இது கட்டுப்படியாகாது என்றும் ஹோட்டலின் வருமானம் வர்த்தகத்திற்காக சிங்கப்பூர் வரும் சீனப் பயணிகளை அதிகம் நம்பியுள்ளது என அவர் கூறினார்.

இதுவரையில் 20% வருமானம் இழந்துள்ள நிலையில், வரும் மாதங்களில் நிலைமை முன்னேறுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி, சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து வந்த 73 வயது மாது 'ஒயேசிஸ்' ஹோட்டல் டாவூன்டவுன்னில் தங்கியிருந்தார்.

அவர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

அந்த ஹோட்டல் அவர் தங்கியிருந்த அறையை தீவிரமாக சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

இந்த இக்கட்டான நிலையில், சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் ஹோட்டல்களில் மூன்றாம் நபர் நிபுணத்துவ துப்புரவு சேவை வழங்கப்பட்டால் அதற்கு அது 50% வரையிலான தொகையை செலுத்தும் என்று அறிவித்துள்ளது.

அப்படி கொரோனா கிருமித்தொற்று ஒரு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டால் அதிகபட்சமாக $20,000மும் சந்தேகிக்கப்படும் கிருமித்தொற்றுக்கு $10,000மும் வாரியம் வழங்கும்.