ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தையொட்டி ஜோகூர் பாரு ஹோட்டல்கள் நிரம்பி வழியும் என அந்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எஃப்1 இரவுநேர கார் பந்தயம் செப்டம்பர் 20 முதல் 22 வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
அதனைக் காண உலகெங்கிலும் இருந்து வருவோர் சிங்கப்பூரிலும் ஜோகூரிலும் ஹோட்டல்களில் தங்குவார்கள்.
அது தொடர்பாக மலேசிய ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் ஜோகூர் கிளைத் தலைவர் ஐவன் டியோ கருத்து கூறியுள்ளார்.
“ஜோகூர்பாரு ஹோட்டல்கள் ஏற்கெனவே பெரும்பாலான வாரயிறுதிகளில் சிங்கப்பூர் வருகையாளர்களாலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளாலும் நிரம்புவது வழக்கம்.
“செப்டம்பர் 20 முதல் 22 வரை உள்ள வாரயிறுதியில் அதனைவிடக் கூடுதலான வருகையாளர்கள் ஜோகூர் ஹோட்டல்களில் தங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
“கார் பந்தயம் தொடர்பில் ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் அந்த வாரயிறுதியில் நிரம்பிவிடும் என்பதும் எங்களது எதிர்பார்ப்பு,” என்று அவர் மலாய் மெயில் செய்தி ஊடகத்திடம் திங்கட்கிழமை (செப்டம்பர் 16) கூறினார்.
நீரிணையைக் கடந்து ஹோட்டல்களில் தங்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர் கார் பந்தயத்தையொட்டி அதிகமானோர் தங்குவதால் ஹோட்டல்களின் அறை வாடகையை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர் பாருவில் உள்ள முன்னணி ஹோட்டல்கள் பலவற்றில் ஏற்கெனவே அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவற்றில் இனி அறைகள் இல்லை என்னும் நிலை உருவாகி உள்ளது. சிலர் ஓராண்டுக்கு முன்னரே பதிவு செய்துள்ளனர்.
அதன் காரணமாக, ஹோட்டல்களின் நவீன வசதிகளைக் கொண்ட ஆடம்பர அறை ஒன்றின் வாடகை ஓர் இரவுக்கு 18,000 ரிங்கிட் எனும் உயரத்தைத் தொட்டுள்ளது.
“சிங்கப்பூரின் அருகே உள்ளதால் ஜோகூர் பாருவின் ஹோட்டல்கள் நிரிம்பி வழியக்கூடும். இருப்பினும் சிங்கப்பூரின் அளவுக்கு ஹோட்டல் அறைகளின் வாடகை உயராது,” என்றார் திரு டியோ.
ஜோகூர் பாருவில் மட்டுமல்லாது, நகரத்தைக் கடந்து ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் அறைகள் எப்போதும் வாடகைக்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

