ஹவ்காங்கில் வாகனம் நிறுத்துமிடம் ஒன்றில் இரண்டு கார் ஓட்டுநர்களுக்கு இடையே நவம்பர் 17ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு கார்களும் ஒரே நேரத்தில் எதிரெதிரே செல்ல முடியாத வகையில் ‘மாஸ்டா’ கார் நின்றுகொண்டிருந்ததால் அதை நோக்கி ‘பிஎம்டபுள்யூ’ கார் ஹாரன் அடித்தது.
அதையடுத்து, இரு கார்களும் ஹாரன் அடித்துக்கொண்டே இருக்க, ஓட்டுநர்கள் இருவரும் பின்னர் வாகனங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.
வாய்ச்சண்டையின் ஒரு கட்டத்தில் மாஸ்டா ஓட்டுநர் தம்மிடம் ஆறு பிரிவுகளில் ஓட்டுநர் உரிமங்கள் இருப்பதாகக் கூறினார். பின்பு ஏன் ‘மாஸ்டா’ கார் ஓட்டுவதாகக் கேட்ட பிஎம்டபுள்யூ ஓட்டுநர், தாம் ‘பிஎம்’ ஓட்டுவதாகப் பதிலளித்தார்.
இதையடுத்து தகாத சொல்லைக் கூறினார் அந்த மாஸ்டா ஓட்டுநர். பிஎம் ஓட்டுநரும் விடுவதாக இல்லை. அவரும் தகாத சொற்களைச் சொன்னார்.
மூன்றாவது நபர் ஒருவர் இருவரையும் விலக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், ஒருவழியாக இரு கார்களும் அருகருகே கடந்து சென்றன. ஆனாலும் இரு ஓட்டுநர்களும் தங்களின் சண்டையை வேறு இடத்தில் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.
இதையடுத்து, தமது தரப்பில் என்ன நடந்தது என ஸ்டோம்ப் தளத்திடம் கூற முன்வந்தார் அந்த மாஸ்டா ஓட்டுநர், திரு லின்.
தொடர்புடைய செய்திகள்
தாம் பயணிகளை இறக்கிவிடும்போது கதவுகளைத் திறக்க அவர்களுக்குக் கூடுதல் இடம் தேவைப்பட்டதால், சாலை நடுவே தமது வாகனத்தை நிறுத்தி இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்போது சாலையில் வேறு வாகனங்கள் வரவில்லை என்றும் கூறினார். ஆனால், பயணிகள் கதவுகளை மூடுவதற்குள் பிஎம்டபுள்யூ ஓட்டுநர் வாகனத்தைத் தனக்கு முன்னால் நிறுத்திவிட்டு ஹாரன் அடிக்கத் தொடங்கியதாக அவர் சொன்னார்.
தம்மைப் புதிய ஓட்டுநர் என்று பிஎம்டபுள்யூ ஓட்டுநர் குறிப்பிட்டதால் தமது வாகன உரிமங்களைக் காட்டியதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
“இந்த மாஸ்டா ஓட்டுநர் செய்த அனைத்திற்கும் காரணம் அந்த பிஎம்டபுள்யூ ஓட்டுநர். பொறுமை காக்கத் தவறிவிட்டார்,” என்றார் திரு லின்.

