அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகள், ஹவ்காங் தனித்தொகுதி ஆகியவற்றை பாட்டாளிக் கட்சி தக்கவைத்துக் கொண்டது.
அல்ஜுனிட் குழுத்தொகுதியில் 59.68 விழுக்காடு, செங்காங் குழுத்தொகுதியில் 56.31 விழுக்காடு, ஹவ்காங் தனிதொகுதியில் 62.17 விழுக்காடு வாக்குகளுடன் பாட்டாளிக் கட்சி வெற்றிபெற்றது.
பாட்டாளிக் கட்சியிலிருந்து பிரித்தம் சிங், சில்வியா லிம்முடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம், 47, கட்சியின் ஏற்பாட்டுக்குழுத் துணைச் செயலாளர் பஃட்லி ஃபவ்ஸி, 36, புதுமுகம் கென்னத் டியோங், 36 ஆகியோர் அல்ஜுனிட்டில் போட்டியிட்டனர்.
அவர்களுக்கு எதிராக மக்கள் செயல் கட்சியின் (மசெக) சான் ஹுய் யு, ஃபைசால் அப்துல் அசிஸ், டேனியல் லியு, ஏட்ரியன் ஆங், ஜெகதீஸ்வரன் ராஜு ஆகியோர் போட்டியிட்டனர்.
மசெக எந்த அமைச்சரையும் அந்தக் குழுத்தொகுதியில் முன்னிலைப்படுத்தாததும், அதன் அணியில் நான்கு புதுமுகங்கள் இருந்ததும் அதன் வெற்றிவாய்ப்புகளைக் குறைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கைகூடிய உத்திகள்
பாட்டாளிக் கட்சியின் தலைவர்களான பிரித்தம் சிங், சில்வியா லிம் ஆகியோரை வேறு குழுத்தொகுதிக்கு மாற்றாமல் அல்ஜுனிட் குழுத்தொகுதியிலேயே வேட்பாளர்களாக நிறுத்திய திட்டம் வெற்றிகண்டுள்ளது. பாட்டாளிக் கட்சியின் தலைவர்களுக்கு மக்களிடத்திலிருக்கும் செல்வாக்கையும் இது காண்பித்துள்ளது.
“சிங்கப்பூருக்காக உழைக்கிறோம்” எனப் பாட்டாளிக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் பிரித்தம் சிங் தலைமையில் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களின் காரசாரமான பிரசாரப் பேச்சுகளும் மக்களைக் கவர்ந்தன என்பதையும் இது குறிக்கிறது.
இதற்குமுன்பு, பிரசாரக் கூட்டங்களின் இறுதி நாளிலும் பிரதமர் வோங், பாட்டாளிக் கட்சிக்கு “பாதுகாப்பான தொகுதிகள்” உள்ளன என தன் பேச்சில் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சென்ற பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 59.93 விழுக்காடு வாக்குகளை வென்றது. 2015ல் நெருக்கமான போட்டியில் அது 50.95 விழுக்காடு வாக்குகளை வென்றது.
2020ல் ஹவ்காங் தனித்தொகுதியில் 61.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பாட்டாளிக் கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் டென்னிஸ் டான். அப்போது அவருக்கு எதிராக மோதியது மசெகவின் லீ சொங் ஹுவாங்.
இந்த வெற்றிகள், ஹவ்காங், செங்காங், அல்ஜுனிட் தொகுதிகள் பாட்டாளிக் கட்சியின் வலுவான தேர்தல் களங்கள் என்பதை நிலைநாட்டியுள்ளது.

