வாரம் ஒருமுறை தமது வீட்டைச் சுத்தம் செய்ய வந்த பகுதிநேரத் துப்புரவுப் பணியாளர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அடையாளக் குறியீடு இடப்பட்ட பண நோட்டுகளைப் பொறிவைத்து, திருட்டை நிரூபித்துக் காட்டியுள்ளார் பெண்மணி ஒருவர்.
இதன் மூலம் திருட்டுக் குற்றச்சாட்டில் பிடிபட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 வயது துப்புரவுப் பணியாளர் நன் ஆயே தான்டார் சோவுக்குத்திங்கட்கிழமை (ஜூன் 15) இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், ‘ஹெல்ப்லிங்’ துப்புரவுச் சேவை நிறுவனம் வழியாக 35 வயது சிங்கப்பூர் பெண்ணின் வீட்டில் அந்த மியன்மார் பெண்மணி வாரந்தோறும் துப்புரவுப் பணிகளைச் செய்து வந்தார். கடந்த மே 27ஆம் தேதி, தமது பையிலிருந்து பணம் காணாமல் போவதைக் கவனித்த வீட்டு உரிமையாளர், துப்புரவுப் பணியாளர் மீது சந்தேகப்பட்டார்.
மறுநாளே, தமது வீட்டின் உள்ளே கண்காணிப்புக் கேமராவை பொருத்தியதுடன், தமது அறையின் ஒரு மூலையில் இருந்த பைக்குள் இருபது $50 நோட்டுகளை வைத்தார். முன்னெச்சரிக்கையாக, அந்தப் பண நோட்டுகளின் வரிசை எண்களையும் அவர் குறித்துக்கொண்டார்.
அன்று மாலை வேலைக்கு வந்த துப்புரவுப் பணியாளர், பை திறந்திருப்பதைக் கண்டு, அதிலிருந்த பணப்பையிலிருந்து மூன்று $50 நோட்டுகளைத் திருடித் தமது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
இரவு 8 மணியளவில் பையைச் சோதித்த வீட்டு உரிமையாளர், மூன்று நோட்டுகள் குறைந்திருப்பதை அறிந்தார். உடனே துப்பரவுப் பணியாளரை அவர் நேருக்கு நேர் எதிர்கொண்டபோது, அந்தப் பணியாளர் தமது பாக்கெட்டில் இருந்த நோட்டுகளை எடுத்து நீட்டினார்.
அவற்றில் இருந்த மூன்று பண நோட்டுகளின் வரிசை எண்கள், வீட்டு உரிமையாளர் குறித்து வைத்திருந்த எண்களுடன் பொருந்தியதை அடுத்து, அவர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

