சிங்கப்பூரில் இந்த வாரம் தரை வீடுகளில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் இருவரில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருப்பதாக நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து திருடியதாக ஃபெங் யுன்லொங், 38, ஸாங் யொங்சியாங், 52 ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் டிசம்பர் 16ஆம் தேதி இரவு 9 மணிவாக்கில் ஹாலந்து பகுதியில், ‘கிரீன்லீஃப் வியூ’வில் உள்ள ஒரு வீட்டின் சன்னலைத் திறந்து அதனுள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த இருவரும் $8,800 மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரத்தையும், $150 மதிப்புள்ள மற்றொரு கைக்கடிகாரத்தையும் திருடியதாக குற்றப் பத்திரிகைகள் தெரிவித்தன.
ஃபெங் மத்தியக் காவல்துறைப் பிரிவிலிருந்து காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருப்பதாகக் கூறிய அவர், வழக்கறிஞரை நாடப்போவதில்லை என்றும் கூறினார்.
ஸாங் தற்பொது சாங்கி பொது மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அவர் வெளிவந்ததும் மத்தியக் காவல்துறைப் பிரிவில் தடுத்துவைக்கப்படுவார் என்றும் நீதிமன்றப் பதிவுகள் காட்டின. அவர் மருத்துவமனையில் இருப்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
அந்த இரு வழக்குகளும் மீண்டும் டிசம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
வீட்டு உரிமையாளர்கள் இல்லாதபோது, ‘கிரீன்லீஃப் வியூ’வில் அந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. இரண்டு நாள்களுக்குப் பிறகு, டிசம்பர் 18ஆம் தேதியன்று வீட்டு உரிமையாளர்கள் அது பற்றி புகார் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் மற்றொரு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.
புவன விஸ்தாவின் ஸெண்டர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து அவர்கள் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளை ஆராய்ந்தபின், காவல்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டனர்.
காவல்துறையினர் ஏறக்குறைய $8,800 மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், $5,000 மதிப்புள்ள விலையுயர்ந்த கைப்பை, நகைகள், $3,750 ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.