சராசரி குடும்ப வருமானம் 2024ல் அதிகரிப்பு

சராசரி குடும்ப வருமானம் 2024ல் அதிகரிப்பு

2 mins read
1681ce28-7952-41a7-9743-76ba7902ec5e
பணியில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகளைக் கொண்டுள்ள குடும்பங்களில், பணவீக்கம் போன்றவற்றை சேர்க்காது சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் 3.9 விழுக்காடு ஏற்றம் கண்டதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை வியாழக்கிழமை (பிப்ரவரி 13) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் சராசரி குடும்ப வருமானம் 2024ஆம் ஆண்டில் $11,297ஆக உயர்ந்துள்ளது.

அரசாங்க உதவி, வரி ஆகியவற்றை உள்ளடக்கிய வருமான ஏற்றத்தாழ்வு 25 ஆண்டு காணாத அளவுக்குச் சரிந்தது.

அரசாங்கத் திட்டங்கள் மூலம் சிங்கப்பூர் குடும்பங்களுக்குக் கூடுதல் பணம் கிடைத்ததைச் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை வெளியிட்ட தகவல்கள் காட்டின.

2024ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதரவு நடவடிக்கைகளால் இது சாத்தியமானது.

பணியில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகளைக் கொண்டுள்ள குடும்பங்களில், பணவீக்கம் போன்றவற்றைச் சேர்க்காது சராசரி மாதாந்தர குடும்ப வருமானம் 3.9 விழுக்காடு ஏற்றம் கண்டதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை வியாழக்கிழமை (பிப்ரவரி 13) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் சராசரி குடும்ப வருமானம் $10,869ஆக இருந்தது.

2024ல் பணவீக்கத்தை சேர்த்து சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் 1.4 விழுக்காடு உயர்ந்தது.

குடும்ப வருமானத்தில் முதலாளிகளின் மத்திய சேமநிதி பங்களிப்பும் அடங்கும்.

2019லிருந்து 2024 வரை பணியில் உள்ள சிங்கப்பூர்வாசிகளைக் கொண்ட குடும்பங்களில் சராசரி மாதாந்தர குடும்ப வருமானம் 3.6 விழுக்காடு அதிகரித்தது.

பணவீக்கத்தைச் சேர்த்து ஆண்டு அடிப்படையில் அது 0.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

அத்தகைய குடும்பங்களில் குறைந்தது ஒருவர் பணிபுரியும் சிங்கப்பூரர் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார்.

2024ஆம் ஆண்டில் பணியில் உள்ள சிங்கப்பூர்வாசிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வேலை மூலம் கிடைத்த சராசரி குடும்ப வருமானம் அனைத்து வருமானப் பிரிவுகளிலும் உயர்ந்தது.

இவற்றின் சராசரி குடும்ப வருமான அதிகரிப்பு 3 விழுக்காட்டுக்கும் 5.9 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருந்தது.

சிங்கப்பூர்வாசிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு 2024ஆம் ஆண்டில் அரசாங்கத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் அடிப்படையில் சராசரியாக $7,825 கிடைத்ததாக சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை தெரிவித்தது.

சில குடும்பங்களில் யாரும் வேலைக்குச் செல்லவில்லை என்றாலும் அத்தகைய குடும்பங்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டில் இத்தொகை $6,418ஆக இருந்தது.

“வாழ்க்கைச் செலவினம், ஓய்வுக்காலம், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் போன்றவற்றில் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க 2024ஆம் ஆண்டில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

“அதன் மூலம் சராசரி குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது,” என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை கூறியது.

ஓரறை, ஈரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர்வாசி குடும்பங்கள் அரசாங்கம் வழங்கும் வழங்கு தொகைகளை தொடர்ந்து அதிகளவில் பெறுகின்றன.

இக்குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் 2024ஆம் ஆண்டில் அரசாங்கத் திட்டங்கள் வாயிலாக சராசரியாக $16,805 பெற்றனர்.

மற்ற சிங்கப்பூர்வாசி குடும்பங்களைவிட இது இரு மடங்கிற்கும் அதிகம்.

குறிப்புச் சொற்கள்