கில்மன் பேரெக்ஸ், கிளமெண்டியில் உள்ள சன்செட் வே ஆகிய இரண்டு இடங்களில் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பவிருக்கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட கேள்விகளை அவர்கள் கேட்கவிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் ‘கவ்டெக்’ எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பில் செய்யப்பட்ட ஆட்குறைப்பு பற்றியும் அவர்கள் அறிய விரும்புகின்றனர்.
நாடாளுமன்றம் நாளை (ஆகஸ்ட் 4) கூடுகிறது. அப்போது உறுப்பினர்கள் தங்களுடைய அக்கறைகள், கவலைகள் குறித்த கேள்விகளை எழுப்ப உள்ளனர்.
சுற்றுச்சூழல், மரபுடைமை ஆய்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கில்மேன் பேரக்ஸ், கிளமெண்டியில் உள்ள சன்செட் வே ஆகிய இடங்களில் புதிய வீடுகளைக் கட்டவுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஜூலை 10ஆம் தேதி அறிவித்தது.
இந்த வீட்டுவசதி மேம்பாடுகளுக்காக சன்செட் வேயில் உள்ள மாஜு வனப்பகுதியில் ஏறக்குறைய 15 ஹெக்டேர் பகுதியும் கில்மன் பேரெக்சில் குறைந்தபட்சம் 10 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்படவிருக்கிறது.
இந்த நிலையில் மாஜு காட்டில் உள்ள பசுமை, தாவரங்கள், உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து இயற்கை, பாதுகாப்பு அமைப்புகள் வழங்கிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படுமா என்று மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஹாலண்ட்-புக்கிட் தீமா நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டோபர் டி சூசா கேள்வி எழுப்பவுள்ளார்.
கில்மன் பேரெக்சிற்கு மாற்றாக வேறு இடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதா என்றும் எந்தக் காரணங்களின் அடிப்படையில் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் தஞ்சோங் பகார் தொகுதியைச் சேர்ந்த மற்றொரு மக்கள் செயல் கட்சி உறுப்பினரான ரேச்சல் ஓங் அறிய விரும்புகிறார்.
மாஜு காட்டிற்கு மாற்றாக வேறு இடங்களைப் பரிசீலிக்க முடியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினரான டெனிஸ் டான், (பாட்டாளிக்கட்சி, ஹவ்காங்) கேள்வி எழுப்பவிருக்கிறார்.
கில்மேன் பேரக்ஸ் மறுமேம்பாட்டுப் பணிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு குடியிருப்பாளர்களுடன் என்னென்ன கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன, அதில் பங்கேற்றவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை அறியவும் அவர் விரும்புகிறார்.
இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் சுருக்கமாக வழங்க தேசிய வளர்ச்சி அமைச்சு ஏற்பாடு செய்யுமா என்பது நாடாளுமன்ற உறுப்பினர் சார்லின் சென்னின் (தெம்பனிஸ்-மசெக) கேள்வியாக உள்ளது.
பொதுமக்களின் கருத்துகள் குடியிருப்புத் திட்ட முடிவுகளுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தன என்பதற்கான தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படுமா என்பதை அறியவும் அவர் ஆர்வமுடன் உள்ளார்.

